தற்போதைய செய்திகள்

காமன்வெல்த் 2018: 26 தங்கம் உட்பட 66 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 3-வது இடம் 

DIN

கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 

21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 256 வீரர்,வீராங்கனைகள் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். கடந்த 11 நாட்களாக நடந்த விளையாட்டுப்போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. 

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 10வது நாள் ஆட்டத்தில் இந்தியா 8 தங்கம் உள்பட 17 பதக்கங்களை பெற்றது. நேற்றைய.ஆட்டத்தின் முடிவில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 59 பதக்கம் பெற்று இருந்தது. 

கடைசி நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் 1 தங்கம், 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றனர். பாட்மிண்டன் பிரிவில் சாய்னா தங்கமும், பி.வி.சிந்து வெள்ளியும், கிடம்பி சிறீகாந்த் வெள்ளி பதக்கமும் வென்றனர். இந்தியாவுக்கான 26-வது தங்கத்தை சாய்னா நேவால் பெற்றார். காமென்வெல்த் போட்டியில் வெல்லும் இரண்டாவது தங்கம் இதுவாகும். இதற்குமுன் 2010-ஆம் ஆண்டில் காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். சிந்துவுக்கு இது இரண்டாவது பதக்கமாகும். கடந்த 2014-ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

21-வது காமென்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது. பதக்க பட்டியலில் 80 தங்கப்பதக்கம், 58 வெள்ளி, 59 வெண்கலம் உள்ளிட்ட 197 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் உள்ளிட்ட 137 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. 

கோல்ட் கோஸ்ட் காமென்வெல்த் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக துப்பாக்கி சுடுதல் பிரிவில் 16 பதக்கங்களை வென்றது. இதில் 7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்கள் அடங்கும். அடுத்ததாக மல்யுத்தப்பிரிவில் 12 பதக்கங்களை வென்றது. இதில் 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கங்கள் அடங்கும். குத்துச்சண்டை, வலுதூக்குதல் பிரிவில் 9 பதக்கங்களை வென்றது. டேபிள் டென்னிஸ் பிரிவில் 3 தங்கம் உள்ளிட்ட 8 பதக்கங்களை வென்றது. 

கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை விட 2018 காமென்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது சிறப்பான செயல்பாடு இதுவாகும்.

இன்று மாலை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில், இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரிகோம் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT