ஜம்மு-காஷ்மீரில் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜிநாமா
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைமை வலியுறுத்தியுள்ளதை
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைமை வலியுறுத்தியுள்ளதை அடுத்து பாஜகவை சேர்ந்த 9 அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் கதுவா பகுதியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே இரு பாஜக அமைச்சர்கள் பதவி விலகிவிட்ட நிலையில், பாஜக மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, மாநிலத்தில் மற்ற அமைச்சர்களையும் நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை முடிவெடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. கதுவா சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவான பேரணியில் பங்கேற்ற பாஜக அமைச்சர்கள் இருவர், கடும் எதிர்ப்பு, விமர்சனத்தால் பதவி விலக நேரிட்டது.
Advertisement
Advertisement
எனினும், கதுவா சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரியும், பிரச்னைக்கு தீர்வுகாண்பதில் தோல்வியடைந்த முதல்வர் மெஹபூப் முஃப்தி பதவி விலக வேண்டும் என்று கோரியும் அந்த அமைச்சர்கள் இருவரும் பாஜகவினருடன் இணைந்து ஊர்வலம் நடத்தினர். இது மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணியில் பிரச்னை ஏற்படும் நிலையை உருவாக்கியது.
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவரையும் பதவி விலகிவிடுமாறு பாஜக தலைமை கூறியதுடன், அவர்களுக்கு பதிலாக புதுமுகங்களை அமைச்சர்களாக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் மேலிட உத்தரவை அடுத்து துணை முதல்வர் நிர்மல் சிங் உள்பட அனைத்து பாஜக அமைச்சர்களும் தங்களின் ராஜிநாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் பால் சர்மாவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அளித்துள்ளனர்.
அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளதால் பிடிபி கூட்டணியில் இருந்து விலகுவதாக அர்த்தம் இல்லை என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.