முகப்பு
தற்போதைய செய்திகள்

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் 

மதுரையில் பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

மதுரையில் பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். தங்கக்குதிரை வாகனத்தில் ஆடி, அசைந்து வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

அழகர்கோவில் கள்ளழகர் திருவிழா, கடந்த 15-ஆம் தேதி தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தொடங்கியது. இதற்காக சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்மலையிலிருந்து தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி சனிக்கிழமை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மூன்றுமாவடியில் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை எதிர்சேவையாக வரவேற்றனர்.

மாலையில் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பலகாரர் மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை வரவேற்றனர்.

இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் எழுந்தருளிய கள்ளழகருக்கு சிறப்பு பட்டு சார்த்தப்பட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவித்து, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தங்கக் குதிரை வாகனத்தில் இன்று அதிகாலையில் புறப்பட்ட கள்ளழகர், தல்லாகுளம் சப்பரத்தடி கருப்பணசாமி கோயில் அருகே வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி கோரிப்பாளையம் வழியாக ஆழ்வார்புரம் பகுதி வைகை ஆற்றில் அதிகாலை 5.50 மணிக்கு இறங்கினார். கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வரவேற்றார் வீரராகவ பெருமாள். 

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய கண்கொள்ளா காட்சியை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பார்த்து தரிசித்தனர். கள்ளழகரை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றங்கரைகளில் நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்திருந்ததால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதுரை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸார் கண்காணித்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →