சென்னை: உடல்நலக் குறைவால் காலமான கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பத்து நாள் பரோல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு காலம் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா.
இந்நிலையில், அவரது கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டையும் மாற்ற வேண்டும் என்ற நிலை உருவானது. இதையடுத்து தஞ்சையில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்த கல்லீரல், சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு, நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது பரோலில் வந்திருந்தார் சசிகலா. சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கி இருந்து கணவர் நடராஜனை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார். உடல்நிலை தேறிய நிலையில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்தார் நடராஜன்.
இந்நிலையில், நடராஜனுக்கு கடந்த 17-ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நடராஜன் இன்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் உயிரிழந்தார்.
இதையடுத்து நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் சில மணிநேரங்கள் வைக்கப்படும். பின்னர் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
விளாரில் நடைபெறும் இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்கிறார். இதற்காக நடராஜனின் இறப்பு சான்றிதழுடன் 15 நாள் பரோல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் 10 நாள் பரோல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.