மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்: காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெஹ்லாட் பேட்டி
மதசார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெஹ்லாட் கூறியுள்ளார்.
புதுதில்லி: மதசார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெஹ்லாட் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது.
222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் கர்நாடகத்தில் அதிகபட்சமாக 72.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 38 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் 222 தொகுதிகளில் பதிவான வாக்குகளை தொகுதி வாரியாக எண்ணுவதற்கு 281 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் குறிப்பாக மத்திய மற்றும் கடலோர கர்நாடக தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதே போல் வட கர்நாடக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. மஜத கட்சியும் 40 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பாஜக ஆட்சியைப் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி எகிறி வரும்நிலையில், குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் சத்தமில்லாமல் 40 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருவதால், மஜதவை தவிர்த்து விட்டு யாராலும் ஆட்சியமைக்கவே முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே தேவெ கெளடா மற்றும் குமாரசாமி கை காட்டும் நபர்தான் முதல்வராக முடியும். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சி அமைப்பு ஏற்படுவதில் தாமதம் ஏற்படும் என்றே தெரிகிறது.
மதஜ 35 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் காங்கிரஸ், பாஜகவின் குடுமி தேவெ கெளடா மற்றும் குமாரசாமி கையில் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெஹ்லாட் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என நான் நம்புகிறேன். மாநிலத்தில் நல்லாட்சி அமைய மதசார்பற்ற ஜனதா தளக்கட்சியுடன் கூட்டணி அமைக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.