முகப்பு
தற்போதைய செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: இந்தியாவுக்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து அளிப்பதற்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து அளிப்பதற்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை செயலாளர் அலீஸ் வெல்ஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஐ.நா. சபை கூட்டத்துக்கு இடையே இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலேயும், அமெரிக்க அரசியல் விவகாரத்துறை இணையமைச்சர் டேவிட் ஹாலேயும் சந்தித்துப் பேசினர். 

இந்தியாவும், அமெரிக்காவும் சா்வதேச ரீதியில் கூட்டாளிகள் ஆகும். ஐ.நா. பொதுச் சபையின் 73 வது மாநாட்டின் போது இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளில் நம்பிக்கை மறுபடியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஹாலே, கோகலே இடையேயான சந்திப்பின் மூலம், சா்வதேச அளவில் சவாலான விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சர்வதேச சவால்களில் ஒன்றாக கொரிய தீபகற்ப பகுதியை அணுசக்தி இல்லாத பகுதியாக மாற்றுவது முதல் அமைதியான மற்றும் அபிவிருத்தி நிறைந்த ஆப்கானிஸ்தானை இணைந்து உருவாக்குவது வரையிலும் அடங்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தத்தின்போது, இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்றார் அவர். 

மாலத்தீவில் நடைபெற்று முடிந்துள்ள அதிபா் பதவி தோ்தல் குறித்து அலீஸ் வெல்ஸிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘மாலதீவில் நடைபெறும் ஜனநாயக ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியாவும், அமெரிக்காவும் வரவேற்கிறது’ என்றார். 

அமெரிக்காவில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி 2017 ஜூன் மாதம் சுற்றுப்பயணம் செய்தபோது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து அளிப்பதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தார். இதேபோல், அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு (என்எஸ்ஜி), ஆஸ்திரேலியா குழு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச அமைப்புகளிலும் இந்தியா உறுப்பினராவதை அமெரிக்கா ஆதரிக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1945-இல் இருந்து அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகளுக்கு ஐ.நா. விவகாரங்களில் வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த கவுன்சிலில் தங்களையும் சோ்க்க வேண்டும் என்று இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →