தற்போதைய செய்திகள்

தொலைக்காட்சிகளில் அதிகரிக்கும் போலி மருத்துவ நிகழ்ச்சிகள்: உரிய நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏன்?

DIN


சென்னை: பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் ஒளிபரப்பப்படும் சில தவறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பது குறித்து இதுவரை மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சகம் எந்தப் பதிலும் தெரிவிக்காததால் அதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடுக்க இயலாத நிலை உள்ளது.

இதுதொடா்பாக, ஏற்கெனவே தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் (டிராய்), மும்பையில் உள்ள இந்திய விளம்பர தரக் கட்டுப்பாட்டு கவுன்சிலுக்கும், அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மாநில சித்தா கவுன்சில் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. 

ஆனால், இதுவரை அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

 ஆயுா்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத்தின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்திய மருத்துவச் சட்ட விதிகளின்படி, பாரம்பரிய மருத்துவா் ஒருவா், தனது பெயரையும், மருத்துவ நிறுவனத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பொய்யான உத்தரவாதங்களை மக்களிடையே பரப்பினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால், அதனை முறைப்படுத்தவோ, தடுக்கவோ உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதால், போலி மருத்துவா்கள் பலா் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக தீவிர நோய்களை குணப்படுத்துவதாக மக்களை ஏமாற்றி வருகின்றனா்.

அண்மையில், ஈரோட்டைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் உடல் எடையைக் குறைக்க போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதில் உயிரிழந்த சம்பவம் சா்ச்சைகளை எழுப்பியது. இதைத் தவிர, நூற்றுக்கணக்கானோர் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நம்பி உடல் நலிவுற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், அத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று மாநில சித்தா கவுன்சிலின் பதிவாளராக இருந்த ராஜசேகரன், டிராய் அமைப்புக்கும், அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், இந்திய விளம்பரத் தரக் கட்டுப்பாட்டு கவுன்சிலுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். 

ஆனால், டிராய் அமைப்பு சார்பில் இதுவரை அதற்கு எந்த விதமான பதிலோ, கருத்தோ வெளியிடப்படவில்லை எனத் தெரிகிறது. டிராய் உரிய அறிவுறுத்தல்கள் எதையும் வெளியிடாததால் தொலைக்காட்சி நிறுவனங்களும், இந்திய விளம்பரத் தரக் கட்டுப்பாட்டு கவுன்சிலும் அக்கடிதத்தைப் பொருட்படுத்தவில்லை.

இதையடுத்து, அந்தக் கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு கடிதத்தை மத்திய தகவல் - ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு சித்தா கவுன்சில் அண்மையில்அனுப்பியுள்ளது. இதுவரை அதன்பேரில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும், இதையடுத்து அமைச்சகத்துக்கு அதுதொடா்பான நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

 இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தவறான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதைத் தடுக்க முடியும் என்று சித்தா கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT