தற்போதைய செய்திகள்

நுகர்வின்மை, விலை வீழ்ச்சியால் மீன்களுக்கு உணவாகும் தர்பூசணிப் பழங்கள்

பெ. விஜயபாஸ்கர்


பவானி: பவானியில் 144 தடை உத்தரவால் சில்லறை வர்த்தகம் நிறுத்தம், பொதுமக்களுக்கு ஆர்வமின்மை, விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் தர்பூசணிப் பழங்கள் ஏரிகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவாகி வருகிறது.

பவானி மற்றும் செலம்பகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், அஞ்சுவல்லக்காடு, மைலம்பாடி, ஒலகடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தர்பூசணி மற்றும் முலாம்பழங்களைச் சாகுபடி செய்துள்ளனர். இரு மாதங்களில் அறுவடை செய்யப்படும் இவ்வகை பயிர்களுக்கு ரூ.40 முதல் ரூ.50 ஆயிரம் வரையில் முதலீட்டுச் செலவு செய்யப்படும்.

கோடை காலம் தொடக்கத்தைக் கணக்கில் கொண்டு விவசாயிகள் இரு மாதங்களுக்கு முன்னர் தர்பூசணி மற்றும் முலாம்பழங்களைச் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில், அறுவடைக் காலம் தொடங்கும் நிலையில் கடந்த மாதம் கரோனா வைரஸ் பரவலால் வெளிமாநிலங்களுக்கு பொருள்கள் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24-ம் தேதி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

இதனால், போக்குவரத்து தடைபட்டதோடு, சில்லறை விற்பனை செய்யப்படும் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளில் வியாபாரம் நிறுத்தப்பட்டது. காய்கறி உள்ளிட்ட அத்யாசியப் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தர்பூசணி, முலாம் பழங்களை வாங்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால், சாகுபடி நிலங்களிலேயே பழுத்தும், அழுகியும் சேதமடைந்து வந்தது.

இந்நிலையில், பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவுக்கு தர்பூசணிப் பழங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் ரூ.10 முதல் ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையான தர்பூசணிப் பழங்கள், தற்போது ரூ.2 ஆயிரம்  வரையில் விற்பனையாகிறது. இதனால், மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் தர்பூசணிப் பழங்களை மீன்களுக்கு உணவாக அளித்து வருகின்றனர்.

பவானி அருகேயுள்ள தாளகுளம் ஏரியில் மீன்களுக்கு 15 டன் தர்பூசணிப் பழங்களை வாங்கியுள்ளதாகவும், இதுவரையில் 4 டன் பழங்கள் உணவுக்கு துண்டுகளாக வெட்டி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்களும் தர்பூசணிப் பழங்களை விரும்பி சாப்பிடுகின்றன. இதனால், சாகுபடி நிலத்திலேயே அழுகி வீணாகும் பழங்களை, கிடைத்தவரை லாபம் எனும் நோக்கில் விவசாயிகளும் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT