தற்போதைய செய்திகள்

கரோனா ஆய்வுக் கூட்டம்: விரைவில் நாமக்கல் வருகிறார் முதல்வர்!

DIN

நாமக்கல்: மதுரை, திருநெல்வேலியை தொடர்ந்து நாமக்கல்லில் கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் வருகிறார் என அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வான 12 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

40 நாள்களுக்கு பின் கரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வந்துள்ளேன். அரசு பணிகள், ஆய்வு கூட்டங்கள் போன்றவற்றில் இதுவரை பங்கேற்கவில்லை. அதனால் புதிய கல்வி கொள்கை மற்றும் இதர பணிகள் குறித்து தற்போது பதிலளிக்க வாய்ப்பில்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் கூறுகிறேன், பொதுமக்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்டால், அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள். தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்களாக மருந்தகங்களுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் சென்று கொண்டிருக்கின்றன. இருப்பினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாதது கவலையளிக்கிறது. திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காததால் தொற்று பரவல் அதிகரிக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு, ஏற்கெனவே உடல் ரீதியான பாதிப்புகள் இருந்துள்ளன. அவர்களும் கடைசி நேரத்தில் தான் மருத்துவமனையை நாடி வந்தனர். அதனால் தான் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. யாராக இருந்தாலும் நோய் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடுங்கள்.

கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மதுரை, திருநெல்வேலிக்கு இந்த வாரத்தில் முதல்வர் செல்கிறார். அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வர உள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அவர்கள் கூடுதல் தொகைக் கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதல்வருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும். அதேபோல் மின் கட்டணத்தை மாதம் ஒரு முறை கணக்கிட்டு வசூலிக்கும் நடைமுறை தொடர்பாகவும் முதல்வருடன் கலந்தாலோசிக்கப்படும். 40 நாள்களுக்கு பின் செவ்வாய்க்கிழமை (ஆக.4) முதல் என்னுடைய அரசுப் பணிகளை தொடங்குகிறேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியின்போது, சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT