தற்போதைய செய்திகள்

ரூ.1,500 க்கு 2 மணி நேரத்தில் இ-பாஸ் : விளம்பரம் வெளியிட்டவர் கைது

DIN

வேலூர், ஆக 4: வேலூரில் ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் எந்த மாவட்டம், மாநிலத்துக்கும் இ-பாஸ் பெற்றுத்தரப்படும் என கவர்ச்சிகர விளம்பரம் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரோனா பரவலைத் தடுக்க 6ஆவது கட்டமாக பொதுமுடக்கம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதுடன், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மக்கள் இ-பாஸ் கோரி இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டாலும் பல நேரங்களில் அந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு விடுகின்றன. இதனால், பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்ல முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து வேலை நிமித்தமாகவும், சொந்த சுக, துக்க நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்வோர் இ-பாஸ் பெற்றிட குறுக்கு வழிகளை நாடத்தொடங்கியுள்ளனர். மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பலரும் தற்போது இ-பாஸ் தொடர்பான மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதன்படி, வேலூரிலும் ரூ.1,500 கொடுத்தால் எந்த மாவட்டத்துக்கும், எந்த மாநிலத்துக்கும் செல்வதற்கு 2 மணி நேரத்தில் இ-பாஸ் பெற்றுத்தரப்படும் என்று கடந்த சில நாட்களாக முகநூலிலும், கட்செவி அஞ்சல் வழியாகவும் கவர்ச்சிகரமான விளம்பரம் பரவி வந்தது.

இதனைக் கண்ட பொதுமக்கள் பலரும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கும் இ-பாஸ் பெற்றுத்தர வேண்டும் எனக்கோரி, பணம் செலுத்தி வந்துள்ளனர். இதில், சிலருக்கு இ-பாஸ் பெற்றுத்தரப்பட்டிருப்பதும், பலருக்கும் பணம் ஏமாற்றப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த மோசடிச் செயல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், வேலூர் பெரி அல்லாபுரம் நாகலிங்கேஸ்வரர் கோயில் வீதியைச் சேர்ந்த அசோக்குமார் மகன் ஜெகதீஸ்குமார் (வயது 18) என்பவர் இ-பாஸ் குறித்து இந்த போலி விளம்பரத்தை வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஜெகதீஸ்குமாரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரது கூட்டாளியான திருப்பூரைச் சேர்ந்த வடிவேல் என்பவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் இ-பாஸ் பெறுவது தொடர்பாக இடைத்தரகர்களை அணுகி ஏமாற வேண்டாம் என்றும், இதேபோல் இ-பாஸ் பெற்றுத்தரப்படும் என பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT