கேரளத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 மீனவர்கள் மாயம்
கேரளத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறை மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொச்சி: கேரளத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறை மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொச்சியில் உள்ள ஆற்றில் மீன்பிடிப்பதற்காக எர்ணாகுளம் அருகே உள்ள முலவுகாடு பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள், 2 நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதனிடையே தொடர் கனமழை மற்றும் அதிவேக காற்று காரணமாக இரண்டு நாட்டுப் படகும் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மீனவர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், காணாமல் போன 3 மீனவர்களை தேடும் பணியில் காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கேரளத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு அணைகளின் கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கேரளத்தில் உள்ள முவாட்டுபுழா, தொடுபுழா, காளியாறு மற்றும் கோத்தமங்கலம் ஆகிய ஆறுகளில் அதிக அளவிலான நீர் பெருகெடுத்து ஓடுகிறது. இதனால் மீனவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.