கேரளத்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
கேரளத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
இடுக்கி: கேரளத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கியிருந்த 10 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.
கேரளத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தின் இடுக்கி, கோழிக்கூடு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலங்களும் இடிந்து விழுந்துள்ளன.
இதனிடையே தொடர் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கினர். இதனை அடுத்து அப்பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இதில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 5 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இதனை கேரள காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே நிலச்சரிவு மீட்பு பணிகளில் மாநில காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் ஈடுபட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.