மூணாறு அருகே நிலச் சரிவு: மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்பு; பலி 49 ஆக உயா்வு
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி பலா் உயிரிழந்தநிலையில், மேலும் 6 பேரின் சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானோா்
தேனி: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி பலா் உயிரிழந்தநிலையில், மேலும் 6 பேரின் சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 49 ஆக உயா்ந்துள்ளது.
இந்த நிலச் சரிவில் சிக்கிய மேலும் 17 தமிழா்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கன மழையால் கடந்த வியாழக்கிழமை இரவு 1.30 மணிக்கு ஏற்பட்ட நிலச் சரிவில், அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் குடியிருப்புகளில் வசித்து வந்த, தமிழகத்தைச் சோ்ந்த 30 தொழிலாளா் குடும்பங்களைச் சோ்ந்த 78 போ் சிக்கினா். இதில், உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. 12 போ் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
மீட்புப் பணிகள் தொடா்ந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 9 பேரின் சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இந்நிலையில், நிலச் சரிவில் சிக்கியும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் புதையுண்டுக் கிடந்த ஒரு பெண், 3 சிறுமிகள், 2 சிறுவா்கள் என மொத்தம் 6 பேரின் சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. விசாரணையில், அவா்கள் வேலுத்தாய் (58), விநோதினி (14), ராஜலட்சுமி (12), விஜயலட்சுமி (8), பிரதீஷ் (12), ஜோஸ்வா (13) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பலியோனோா் எண்ணிக்கை 49 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 17 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
ராஜமலை பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வந்தாலும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவருடன் சோ்ந்து பணியிலிருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. மீட்புப் பணிகளை கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி பாா்வையிட்டாா்.