முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவிலுக்குச் செல்வதைத் தடுத்த காவல்துறை: அத்திமலையில் முற்றுகையிட்ட மக்கள்

செய்யாறு அருகே கோவில் பகுதிக்கு பெண்களை செல்லவிடாமல் தடுத்த காவல்துறை மீது நடவடிக்கைக் கோரி அத்திமலையை முற்றுகையிட்டு அத்தி கிராம மக்கள் செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
கோவிலுக்குச் செல்வதைத் தடுத்த காவல்துறை: அத்திமலையில் முற்றுகையிட்ட மக்கள்
பகிர்:


செய்யாறு அருகே கோவில் பகுதிக்கு பெண்களை செல்லவிடாமல் தடுத்த காவல்துறை மீது நடவடிக்கைக் கோரி அத்திமலையை முற்றுகையிட்டு அத்தி கிராம மக்கள் செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது அத்தி கிராமம். இக்கிராமத்திற்கு மிக அருகில் சுமார் 16 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 5 கி.மீ சுற்றளவிற்கு மலையும், அதன் மீது ஶ்ரீகந்தன் முருகன் கோயில் ஒன்றும் அமைந்து உள்ளது.

மேலும், மலைப்பகுதியில் நூற்றுகணக்கான குரங்குகள், மயில் முயல், மான் போன்ற உயிரினங்கல் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. அத்தி கிராம சர்வே எண் 301 -ல் 450 ஹெக்டரில் விஸ்தீரணத்தில் உள்ள இந்த மலையை கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் குவாரிக்காக டெண்டர் விடப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு விடப்பட்ட டெண்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விடப்பட்ட டெண்டரை ரத்துச் செய்யக் கோரி ஜீலை.28 ம் தேதி செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே கிராம மக்கள் சார்பில் ஆர்பாட்டம் நடத்தினர்.

பின்னர் கோட்டாட்சியர் கி.விமலாவிடம் அத்தி  கிராமத்தை காக்கும் அரணாகவும், செய்யாறு ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் வெள்ள நீர் கிராமத்திற்குள் வராமல் தடுக்கும் அரணாக இருந்து வருகிறது என்றும், விவசாயிகளின் பாதுகாவலராகவும், பல உயிரினங்கள் வாழ்வதற்கு புகழலிடமாக அத்தி மலை விளங்கி வருகிறது என்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.   

அத்தி கிராம மக்கள் மலையை டெண்டர் விடப்பட்டதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் மலைப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஆடி மாதம் என்பதால் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள் மலை மீது ஶ்ரீகந்தன் முருகனை வழிபட திங்கள்கிழமை (ஆக.10) சென்றதாகத் தெரிகிறது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் கோயில் பகுதிக்கு செல்லவிடாமல் தடுத்தும் பெண்களை இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது. 

இழிவாக பேசிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அத்திமலையடிவாரப் பகுதியில் திங்கள்கிழமை மதியம் சுமார் 75 பெண்கள் உள்பட 200 பேர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செய்யாறு வட்டாட்சியர் ஆர்.மூர்த்தி, காவல் ஆய்வாளர் ராஜாராம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் சார்பில் தெரிவித்த குவாரிக்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்தல், கோயில் பகுதியில் பெண்கள் கோவில் பகுதியில் வழிபடுவதை தடுக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கிராம மக்கள் சார்பில் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாகத் தெரிவித்து சமாதானம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.சரவணன் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஆடிகிருத்திகை தினத்தன்று (ஆக.12) அத்திமலைப்பகுதியில் உள்ள முருகப் பெருமானை வழிபட தங்கு தடையின்றி பாதுகாப்புடன் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
புகைப்பட விளக்கம்:
அத்திமலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.