கம்பம் : முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக, 2 மாதத்திற்குப்பின் ஆக.13 ல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணை நீரை நம்பி, கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் மழைக்குறைவால் அணையின் நீர்மட்டம் 115 அடிக்கும் குறைவாகவே இருந்தது. அதனால் ஜூனில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அண்மையில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் தற்போது 136 அடியைக் கடந்துள்ளது. இந்நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக வியாழக்கிழமை தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
சாகுபடிக்கு வினாடிக்கு 200 கன அடி நீரும், குடிநீருக்கு 100 கன அடி நீரும் சேர்த்து 300 கன அடி நீர், 120 நாட்களுக்கு திறந்து விட அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் 2 மாதம் தாமதமாக ஆக. 29 ல் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது நீர்மட்டம் 128.10 அடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.