தமிழகத்தின் 2-வது தலைநகரம் : அமைச்சர் ஆர். காமராஜ் விளக்கம்
தமிழகத்தின் 2-வது தலைநகரம் குறித்து அமைச்சர்களின் கருத்து அவர்களின் சொந்த பகுதியின் வளர்ச்சிக்கானது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
மன்னார்குடி: தமிழ்நாட்டின் 2-வது தலைநகராக மதுரை, திருச்சி அமைய வேண்டும் என அமைச்சர்கள் மாறுப்பட்டு தெரிவித்திருப்பது, அவர்களின் சொந்த பகுதியின் வளர்ச்சிக்கான கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள ஆலங்கோட்டை, மகாதேப்பட்டணம் ஆகிய இடங்களில் சுகாதாரத் துறையின் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு சிறப்பு முகாமினை தொடங்கி வைத்த பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் தான் இருந்து வந்தது. சென்னை, வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கையால் தொற்று பாதித்தவர்கள் மொத்தம் 2431 பேர். பாதிப்பு அதிகமாக தெரிந்தாலும், அரசின் தீவிர நடவடிக்கையால் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து 83 சதவீதம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 389 பேருக்கு மட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 10 பேர் என்ற அளவில் தான் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இறப்பு வெறும் ஒரு சதவீதம் மட்டுமே. அதிலும், ஏற்கனவே அவர்கள் வேறு பல நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடங்குவர்.
தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக மதுரை அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு கூறியிருக்கும் நிலையில் எம்.ஜி.ஆர் விரும்பியப் படி திருச்சியை தான் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தெரிவித்திருப்பதும், அந்த அந்த அமைச்சர்களின் சொந்த பகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தான். இது பற்றி நான் பதில் சொல்ல முடியாது.
மாதம் தோறும் 14,800 மெட்ரிக் டன் கோதுமை நியாயவிலைக் கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நகர பகுதிக்கு 10 கிலோவும், கிராமப் பகுதிக்கு 5 கிலோவும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, கூடுதலாக அரிசி 5 கிலோ வழங்குவதில், நுகர்வோர் விரும்பினால் ஒரு கிலோ கோதுமை வழங்கப்படும். இதற்காக மத்திய அரசு கூடுதலாக 7 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவின் சார்பில் யார் முதல்வர் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. இது குறித்து கட்சியின் தலைமை தெளிவாக விளக்கத்தை அறிக்கையாக தந்துவிட்டது. அது தான் அதிமுகவின் உறுதியான பதில் என்றார் அமைச்சர் .
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார். இதில், மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.புண்ணியக் கோட்டி, பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துவ துறை துணை இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.