முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜபாளையத்தில் பூட்டியிருந்த கோயிலுக்குள் சாமி சிலைகள் சேதம்: காவல்துறை விசாரணை

ராஜபாளையத்தில் பூட்டியிருந்த கோயிலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கேமராவை திருப்பி விட்டு புகைப்பிடித்தல், சாமி சிலைகளை சேதப்படுத்துதல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது டவடிக்கை எடுக்க கோரிக்கை

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
கருப்பஞானியார் கோயில்
பகிர்:

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பொது முடக்கத்தால் பூட்டியிருந்த கோயிலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கண்காணிப்பு கேமராவை திருப்பி விட்டு புகைப்பிடித்தல், சாமி சிலைகளை சேதப்படுத்துதல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் அம்பலபுளி பஜாரை அடுத்த பகுதியில் கருப்பஞானியார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் அய்யப்பன், மாணிக்கவாசகர், திருமூல சம்மந்தர், சாய்பாபா, விநாயகர், முருகன், சனீஸ்வரர், நவக்கிரகம், ஆஞ்சநேயர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உள்ளது.

தற்போது கரோனா பொது முடக்கத்தால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இரண்டு நேர பூஜை ஒரு நேரமாக குறைக்கப்பட்டு, பூஜைக்கு மாலை கட்டுவதற்கு பெண்கள், சில மூதாட்டிகள் மற்றும் பூசாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு தினமும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. வழிபாடு முடிந்தவுடன் 3 பக்கமும் உள்ள கதவுகள் பூட்டப்படும். 

அனைவரும் வெளியேறி, கதவுகள் பூட்டப்பட்ட பின்னர் அருகே உள்ள மாற்று பிரிவை சேர்ந்த 10 முதல் 16 வயதுக்கு உள்பட்ட 10 க்கும் மேற்பட்டவர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைகின்றனர். இவர்கள் கூட்டாக கோயில் வளாகத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

மேலும் அங்குள்ள தண்ணீர் குழாய்களை சேதப்படுத்துதல், குழாயைப் பிடித்து மேலேறி கண்காணிப்பு கேமராவை வேறு பக்கம் திருப்பி விட்டு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தட்சிணாமூர்த்தி சன்னதி வழியே மேலே ஏறி, விமானத்தில் பதிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், அகத்தியர், பசுமாடு உள்ளிட்ட பல்வேறு சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்த பெரியோர்களையும், பூசாரிகளையும் சிறுவர்கள் கூட்டமாக வந்து மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து மாலை கட்டுவதற்கு கூட கோயிலுக்கு வருவதற்கு அச்சப்படுவதாக  மூதாட்டிகள் தெரிவித்தனர்.

தற்போது கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முன் ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், வீட்டில் கண்டிக்கப்படாத இது போன்ற சிறுவர்களின் செயல்கள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக, கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சி.சி.டி.வியில் பதிவாகி உள்ள புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு, சிறுவர்களையும் பெற்றோர்களையும் எச்சரிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →