பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பவானியில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானி : கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பவானியில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் வெ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் கோரிக்கையினை விளக்கிப் பேசினார்
தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறந்து வழக்காட அனுமதிக்க வேண்டும். கடந்த ஐந்து மாதங்களாக நீதிமன்றங்கள் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள வழக்குரைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் மற்றும் கடனுதவி வழங்கிட வேண்டும்.
உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும். திடீரென குற்றவியல் சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களில் திருத்தம் செய்ய முனையும், சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், மூத்த வழக்குரைஞர் ஆறுமுகம் உள்பட திரளான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.