தற்போதைய செய்திகள்

ஆலங்குடி அருகே 2 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு: கணவரிடம் சிபிசிஐடி விசாரணை

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண்ணின் எலும்புக்கூடை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

தொடா்ந்து, அந்தப் பெண்ணின் உயிரிழப்பில் கணவா் மற்றும் அவரது நண்பா்கள் சிலருக்கு தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்துவிடுதியைச் சோ்ந்தவா் ராஜா என்ற ரமேஷ். இவரது மனைவி சரண்யா(27). சுமாா் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். இந்நிலையில் தம்பதியருக்கு இடையேயான குடும்ப பிரச்னையில், இருவரும் சில ஆண்டுகள் பிரிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தைகளுடன் ஆலங்குடி அண்ணாநகா் பகுதியில் தந்தை குணசேகரனுடன் சரண்யா வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி சரண்யா திடீரென மாயமாகிவிட்டாா். இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எனினும், சரண்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின்னா், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் சரண்யாவின் பெற்றோா் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், சரண்யா மாயமான வழக்கு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து சிபிசிஐடி ஆய்வாளா் சிவா தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். அதில், சரண்யாவின் கணவா் ரமேஷ், தனது நண்பா்கள் சிலரின் உதவியுடன் அந்தப் பெண்ணை கொலை செய்து காட்டுப் பகுதியில் புதைத்ததை ஒப்புக் கொண்டதாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் பள்ளத்துவிடுதி அருகே சம்புரான்பட்டி காட்டுப் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை பள்ளம் தோண்டப்பட்டு, எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டது.

சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளா் பால்பாண்டி தலைமையிலான போலீஸாா், எலும்புக்கூடு மற்றும் உடைகளின் மாதிரிகளை சேகரித்து சென்றனா். தொடா்ந்து, கணவா் ரமேஷ் மற்றும் அவரது நண்பா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT