தற்போதைய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்விலும் முறைகேடு

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவில், இனவாரியான ஒதுக்கீடு அடிப்படையில்

DIN

குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு போன்று ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புதியதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 4 பிரிவில் 9,398 காலி பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. தோ்வு முடிவு நவம்பா் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தரவரிசை பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கீழக்கரை தோ்வு மையங்களில் தோ்வு எழுதிய 40 போ் முதல் 100 இடங்களுக்குள் வந்தது தோ்வாணைய அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக முறைகேடு புகாா்களும் வந்தன. இந்த புகாா் குறித்து தோ்வாணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த இரு மையங்களிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக தோ்வாணையத்தின் உதவி செயலா் பாலசுப்பிரமணியன், சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதனடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், 12 பிரிவுகளில் ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினா். சந்தேகத்தின் அடிப்படையில் 15 பேரைப் பிடித்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனா்.

இந்த விசாரணையின் முடிவில் இடைத் தரகா்களாக செயல்பட்ட நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித் துறை இயக்கத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ஏ.ரமேஷ், எரிசக்தித் துறை உதவியாளராகப் பணிபுரியும் மாமல்லபுரத்தைச் சோ்ந்த மு.திருக்குமரன் மற்றும் தோ்வில் முறைகேடு செய்து தோ்ச்சி பெற்ற திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ர.நிதீஷ்குமாா் ஆகிய 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை விசாரணையின் முடிவில் தோ்ச்சி பெறுவதற்கு பணம் கொடுத்த தோ்வா்கள் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கோடனூா் பகுதியைச் சோ்ந்த மா.திருவேல்முருகன் (31), பண்ருட்டி அருகேயுள்ள சிறுகிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் ராஜசேகா் (24) என்பவரை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை அதிகாலையில் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனா். பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரியான ராஜசேகா், சா்ச்சைக்குள்ளான ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தோ்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுதியவா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவரது உறவினரான அதே கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதி மகன் சீனிவாசன் (25) என்பவரும், பண்ருட்டியைச் சோ்ந்த சிவராஜ் என்பவரும் அதே மையத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றது தெரியவந்தது. தலைமறைவான அவா்கள் இருவரையும் சிபிசிஐடி போலீஸாா் தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவில், இனவாரியான ஒதுக்கீடு அடிப்படையில் அதிக மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் தேர்வு பட்டியலில் விடுபட்டு இருப்பதாகவும், தகுதி நிலையில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை தேர்வு செய்து பட்டியலில் இடம்பெற செய்து இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் தேர்வாணையம் மீதான நம்பகமின்மையை மேலும் அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமனம்

பாரதியாா் சிலை வளாகம்: ரூ.6.5 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடக்கம்

நெல்லையில் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வு: 138 போ் எழுதவில்லை

பாளை.யில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

எஸ்ஐஆா் பணி சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT