முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவது சரியா? சித்த மருத்துவரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் பொறுப்பை வகிக்கும் முதல்வரை அவதூறாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா என குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
சென்னை உயர்நீதி மன்றம்
பகிர்:

அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் பொறுப்பை வகிக்கும் முதல்வரை அவதூறாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா என குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம். கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் தணிகாசலம் கூறும் காட்சிகள் பரவியது.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீஸார் அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். சித்த மருத்துவத்தில் அனுபவ அறிவை மட்டும் வைத்துக் கொண்டு  உரிய அங்கீகாராமோ தகுதியோ பெறாத நிலையில் தணிகாசலத்தை மருத்துவராக எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்பு வகிக்கின்ற முதல்வரை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சிப்பது ஏற்புடையதா என கேள்வி எழுப்பினர்.  குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரும் மனுவில் தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும்  தணிகாசலம் கண்டுபிடித்ததாக கூறும் கரோனா தடுப்பு மருந்து குறித்த விண்ணப்பத்தின் மீது  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்க தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.