கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கரோனா பாதிப்பு
தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 வயது முதியவர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆரஞ்சு மண்டலமாக மாறியது.
கிருஷ்ணகிரி: தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 வயது விவசாயி ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆரஞ்சு மண்டலமாக மாறியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது நிறைந்த விவசாயி, கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி ஆந்திராவில் உள்ள ஒரு கோவிலுக்கு சேவையாற்ற சென்றார்.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் 25 -ஆம் தேதி ஒரு காரில் அவரும் அவருடன் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பாலாஜி நகர், தம்பு செட்டி தெரு, மேல் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேரும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திரும்பினர்.
இந்த நிலையில் இவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. அப்போது இவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி ஆனது.
இத்தகைய நிலையில் விவசாயி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மீண்டும் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் விவசாயிக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து விவசாயி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
விவசாயிக்கு தொற்று உறுதியான நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள், காரில் பயணம் செய்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட விவசாயின் நல்லூர் கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகா் தெரிவித்துள்ளார்.
முதியவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக மாறியது.