முகப்பு
தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டையில் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபை கூட்டம்  

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில்  சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
அருப்புக்கோட்டையில் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபைக்கூட்டம்  
பகிர்:

அருப்புக்கோட்டை:  அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட கோபாலபுரம், உடையநாதபுரம், பாளையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில்  சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி நாளான அக்.2ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு அந்நாளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்த தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனவே அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்களும் அக்.2ம் தேதியான வெள்ளிக்கிழமை பூட்டப்பட்டிருந்தன. இதனிடையே அருப்புக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்  தொகுதிக்குள்பட்ட 3 கிராம ஊராட்சிகளில் தானே தலைமையேற்று கிராமசபைக்கூட்டங்களை நடத்தினார்.

இதன்படி பூட்டப்பட்டிருந்த கோபாலபுரம் ஊராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள காலியிடத்திலும், மேலும் பாளையம்பட்டி மற்றும் உடையநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தனியார் மண்டபங்களிலும் கிராம சபைக் கூட்டங்களை அவர் நடத்தி சிறப்புரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து, விவசாயிகளைப் பாதிக்கும் விதமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு ஆதரவளித்துள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டையும் கண்டித்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்துடன் மத்திய அரசு விவசாயிகளைப் பாதிக்கக்கூடியதான வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி ஊராட்சிமன்ற உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞரணிப் பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.கே.எஸ்.வி.டி.சுப்பாராஜ், தற்போதைய ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சசிகலா பொன்ராஜ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் பொன்ராஜ் மற்றும் பாலகணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும், நேரில் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →