கூத்தாநல்லூர்: உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன சமூகப் பணிகள்
கூத்தாநல்லூர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நிறுவனம் சார்பில் செய்யப்பட்ட சமூகப் பணிகள் குறித்து விளக்கப்பட்டன.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நிறுவனம் சார்பில் செய்யப்பட்ட சமூகப் பணிகள் குறித்து விளக்கப்பட்டன.
மேலப்பனங்காட்டாங்குடி, மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, நிர்வாக இயக்குநர் ப.முருகையன் தலைமை வகித்தார். கக்கன் உழவர் மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சேரன்குளம் உழவர் மன்றத் தலைவர் வினோத் வரவேற்றார்.
கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகளிடம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன. தொடர்ந்து, நிர்வாக இயக்குநர் முருகையன் கூறியது:
நபார்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள கூத்தாநல்லூர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில், ஆர்வமுள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து பங்குதாரர்களாக இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் ஆயுள் சந்தாவான ரூ. ஆயிரம் முதலீட்டுடன், அரசு வழங்கும் மான்யமான ரூ.10 லட்சத்தையும் இணைக்கப்படும்.
தொடர்ந்து, இந்நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருக்கும், விவசாயிகளுக்குத் தேவையான இடுப் பொருட்கள் வாங்குவதற்கு வழங்கப்படுகிறது.
மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப் படுவதில்லை. விவசாயிகளே விலை நிர்ணயம் செய்து, நேரிடையாகவே விற்கப்படும்.மேலும், கூத்தாநல்லூர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில், பேரிடர் காலங்களில் பல்வேறு உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. வேளாண்துறை ஒத்துழைப்புடன், கஜா புயல் காலத்தில் அரிசி, உடைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளையும் செய்யப்பட்டன. கரோனா தொற்று ஊரடங்கு காலத்திலும், கூத்தாநல்லூர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில், அனைத்து காய்கறிகளும் அடங்கிய காய்கனி பை குறைந்த விலையில், இல்லம் தேடிச் சென்று வழங்கப்பட்டன. இது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் ஆர்.மருதுபாண்டியன் செய்தார். கூட்டத்தில், முல்லை உழவர் மன்றத் தலைவர் எம்.சுந்தரி, இயக்குநர்கள் மற்றும் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பனங்காட்டாங்குடி, வேளுக்குடி, பழையனூர், சேரன்குளம், சித்தனக்குடி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர். வினோத் நன்றி கூறினார்.