தற்போதைய செய்திகள்

தடகள வீரர் மில்கா சிங் மறைவு: தமிழக முதல்வர் இரங்கல்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

இந்தியாவின் பிரபல நட்சத்திர விளையாட்டு வீரர்களில் ஒருவரான மில்கா சிங்கின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. அவரது வாழ்க்கை மற்றும் அனைத்து முரண்பாடுகளையும் மீறும் சாதனைகள், இளம் இந்தியர்களை ஊக்குவிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மில்கா சிங்குக்கு கடந்த மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவா், சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையை தொடா்ந்து அவருக்கு கரோனா தொற்று இல்லை என கடந்த புதன்கிழமை பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அதே மருத்துவமனையில் பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாா். வியாழக்கிழமை மாலைக்குப் பின்னா் அவரது உடல்நிலை மோசமடைந்து, வெள்ளிக்கிழமை இரவு 11.30-க்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

மில்கா சிங்கின் 85 வயது மனைவியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புகழ்பெற்ற தடகள வீரரான மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 முறை தங்கப் பதக்கம் வென்றவா். 1958 காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவா். 1960 ரோம் ஒலிம்பிக்கில் 400 மீ. சுற்றில் 4-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தாா். 1956, 1964 ஒலிம்பிக் போட்டிகளிலும் அவா் பங்கேற்றாா். விளையாட்டுத் துறை சாதனைக்காக அவருக்கு 1959-இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT