‘சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன்’: மம்தா
சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா காணொலி வெளியிட்டுள்ளார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா காணொலி வெளியிட்டுள்ளார்.
மேற்குவங்கம் நந்திகிராமில் உள்ள துர்கா கோயிலில் புதன்கிழமை வழிபட்ட பிறகு வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தள்ளிவிட்டதாக மம்தா பானர்ஜி பரபரப்பு புகார் தெரிவித்தார்.
அதில் காயமடைந்த மம்தா, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மம்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, திரிணமூல் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வெளியிட்ட மம்தா கூறியதாவது,
நேற்று பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரின் அருகே செல்லும்போது மர்ம நபர்களால் தள்ளப்பட்டேன். அதில், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையை முடித்துக் கொண்டு ஓரிரு நாள்களில் மிண்டும் பணிக்கு புறப்படுவேன்.
எனக்கு ஏற்பட்ட காயத்தால் பிரசாரம் பாதிப்படைவதை விரும்பவில்லை, சக்கர நாற்காலியில் நகர்ந்தாவது பிரசாரத்தை மேற்கொள்வேன்.
அனைத்து தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத் தேர்தலில் ஆளும் திரிணமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக புதன்கிழமை அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.