தேனி மாவட்டம் கூடலூர் அருகே டிப்பர் லாரியின் பின்புறம் மோட்டார் பைக் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார், மற்றொரு இளைஞர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை, ஆரப்பாளையம், பூங்காநகரை சேர்ந்தவர் ராமபாண்டி மகன் நாகராஜ், ஆனையூர், ஹவுசிங் ஃபோர்டு காலனியை சேர்ந்த கண்ணன் மகன் ஸ்ரீதரன் (25), இருவரும் நண்பர்கள். திங்கள்கிழமை குமுளி அருகே உள்ள நாகராஜின் உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் பைக்கில் மதுரைக்கு கூடலூர் வழியாக இரவு நேரத்தில் சென்றனர். மோட்டார் பைக்கை நாகராஜ் ஓட்டி வர பின்னால் ஸ்ரீதரன் அமர்ந்திருந்தார்.
அப்போது கூடலூரை நோக்கி வந்த டிப்பர் லாரி புறவழிச்சாலை சந்திப்பில் கல்உடைக்கும் கிரஷரை நோக்கி திரும்பியது. இன்டிகேட்டர் விளக்கு போடாமல் டிப்பர் லாரி திரும்பியதால், மோட்டார் பைக் எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி மீது மோதியது.
மோதிய வேகத்தில் மோட்டார் பைக்கில் வந்த இளைஞர்கள் படுகாயத்துடன் சாலையில் விழுந்தனர்.
விபத்தை பார்த்தவர்கள் இருவரையும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீதரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், நாகராஜ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த ஸ்ரீதரன் பிரேதத்தை கம்பம் அரசு மருத்துவமனை மூலம் உடற்கூறு பரிசோதனைக்கு ஒப்படைத்து, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.