தமிழகத்தில் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டப்பட்டிருந்த சமுதாயத் தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதைப் போன்று, கள்ளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளின் ஜாதி அடையாளத்தை தவிர்க்கவும், நிர்வாகச் செலவுகளை குறைக்கவும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் 58,734 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 24,321 அரசுத் தொடக்கப் பள்ளிகள், 6,966 அரசு நடுநிலைப் பள்ளிகள், 6,172 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மேலும், 8,357 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12,918 தனியார் சுயநிதிப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பெரும்பாலான பள்ளிகள் செயல்பட்டு வந்தாலும், கள்ளர் சீரமைப்புத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிர்வாகங்களின் கீழ் 292 கள்ளர் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 1,138, பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் 318, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் 8 என மொத்தம் 1,756 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 1.40 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
தொடரும் சமுதாய அடையாளம்:
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் (மதுரை, திண்டுக்கல், தேனி), சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் குற்றப்பரம்பரைச் சட்டம் அமலில் இருந்த காலத்தில், கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலம் கருதி, 1925-ஆம் ஆண்டு கள்ளர் பள்ளிகள் தொடங்கப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், இந்த பள்ளிகள் வருவாய்த் துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இப்பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையைச் சேர்ந்த இணை இயக்குநர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இதேபோல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளும், மலைப் பகுதிகளில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் மற்றும் ஏகலைவா பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. சமுதாய ரீதியாக கல்வியில் பின்தங்கியிருந்த நிலையில், இந்த பள்ளிகள் தொடங்கப்பட்டன.
இப்பள்ளிகளில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்க வாய்ப்பளிக்கப்பட்டாலும், பெரும்பாலான ஆசிரியர் பணியிடங்கள் குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்தே நிரப்பப்படுகின்றன. இதனால், பிற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அனைத்து நிலைகளிலும் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ள இன்றைய சூழலில், பள்ளிகளின் பெயரில் தொடரும் சமுதாய அடையாளங்களை தவிர்க்க வேண்டும் என பரவலாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இரட்டை நிர்வாகத்தால் சிக்கல்:
கள்ளர் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் சார்ந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் சுணக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், கள்ளர், ஆதிதிராவிடர் துறை சார்ந்த பள்ளிகளுக்கு பொருந்துவதில்லை. ஆனால், நலத்துறை அலுவலர்கள் நடத்தும் கூட்டங்கள் மட்டுமின்றி, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் நடத்தும் கூட்டங்களிலும், கள்ளர் பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பள்ளி செயல்பாடுகள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்களிடையே சமுதாய வேற்றுமையை தவிர்க்கும் வகையிலும், கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், நலத்துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, அவர்கள் கூறியது: 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த சமுதாயச் சூழல் இன்று மாறிவிட்ட நிலையில், பள்ளிகள் சமுதாய அடையாளத்துடன் செயல்பட வேண்டிய அவசியமில்லை. அரசுத் தரப்பில் நிர்வாகச் செலவினங்களை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டு வரும் நிலையில், நலத் துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஒன்றிணைத்தால் நூற்றுக்கணக்கான அமைச்சுப் பணியாளர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்த முடியும்.
அதேபோல், கற்றல் உபகரணங்கள் எடுத்துச் செல்லும் பணிகளிலும் இரட்டை செலவு ஏற்படுகிறது.
கடந்த 1990 -ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், ஜாதிய மோதல்களுக்கு ஒரு தீர்வாக மாவட்டங்களின் பெயர்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டப்பட்டிருந்த சமுதாயத் தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதேபோன்று, பள்ளிகளை சமுதாய ரீதியாக அடையாளப்படுத்தும் நடைமுறைக்கும் தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.