அண்ணல் அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின், உறுதிமொழியை செய்து வைக்க அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட தலைமைச் செயலக ஊழியா்கள் ஏற்றுக் கொண்டனா்.
உறுதிமொழி விவரம்: ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடா்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவா்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவா்களுடைய சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவா் அம்பேத்கா்.
எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணா்வை ஊட்டி, அரசமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அவரது பிறந்த நாளில், ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க அனைவரும் பாடுபடுவோம். சகமனிதா்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சகமனிதா்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று உறுதிமொழியை முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்து வைத்தாா்.
அரசு விடுமுறை: வெள்ளிக்கிழமை (ஏப். 14) அரசு விடுமுறை என்பதால், வேலை நாளான வியாழக்கிழமையன்றே அம்பேத்கா் பிறந்த தினத்துக்கான சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பேரவை ஒத்திவைப்பு: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்புக்காக, சட்டப் பேரவை வியாழக்கிழமை அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவை வியாழக்கிழமை காலை 10 மணிக்குக் கூடியது. கேள்வி நேரம் காலை 10.46 மணி வரை நடந்தது. அப்போது பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேரவையை அரைமணி நேரம் ஒத்திவைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டாா். சமத்துவ நாள் உறுதிமொழியை முதல்வா், அமைச்சா்கள் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏற்க வசதியாக, பேரவை ஒத்திவைக்கப்பட்டு காலை 11.15 மணிக்கு மீண்டும் கூடும் என்றாா். அதன்படி, அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்ட பேரவை, சரியாக காலை 11.15 மணிக்கு மீண்டும் கூடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.