கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தது.
தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் நிக்சன் (40). இவா் வாடகைக் காா் ஓட்டுநராக உள்ளாா். இவா், தனது மனைவி, மகள் பெமினா (15), மகன் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை(மே 14) சுருளி அருவிக்குச் சென்றாா்.
இவா்கள், அருவியில் குளித்துவிட்டு, வெண்ணியாறு வனப் பகுதிக்கு செல்லும் சந்திப்பில் நடந்து சென்ற போது 70 அடி உயரத்திலிருந்து காய்ந்த மரக்கிளை ஒன்று பெமினாவின் தலை மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், பெமினா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதியிருந்த பெமினா, மரக்கிளை விழுந்ததில் உயிரிழந்தாா்.
இதன் எதிரொலியாக கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை செய்து, அருவி பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் செல்லும் சாலையில் உள்ள மரங்களின் காய்ந்த கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை(மே 18) முதல் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்து கண்காணிப்பு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.