தென் மாநிலங்களில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெறும்! அமித் ஷா உறுதி
தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா பெரும் வெற்றி பெறும் என்கிறார் அமித் ஷா.
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த நேர்காணலில், பாரதிய ஜனதா கட்சி திடமாக முன்னேறி வருவதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
தென் மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகியவற்றில் பெரும் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்த இலக்கின்படி, 400-ஐக் கடக்கும் இலக்கில் இந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான திட்டங்களில் ஒன்று, ‘தெற்கைக் கைப்பற்றுவது’.
இந்த நான்கு மாநிலங்களும் – கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு - சேர்ந்து மக்களவைக்கு 109 உறுப்பினர்களை அனுப்பிவைக்கின்றன. 2019 தேர்தலில் இவற்றில் 29 தொகுதிகளில்தான் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. தமிழ்நாட்டிலும் ஆந்திரத்திலும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இந்த முறை, கேரளத்திலும் வெற்றியைத் தொடங்குவதுடன் இவ்விரு மாநிலங்களிலும் பெரியளவில் வெற்றிகள் கிடைக்கும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.