மதச்சார்பற்ற ஜனதா தளக்கட்சியின் எம்பி பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் என்றும், விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் கோரியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் மதச்சார்பற்ற ஜனதா தளக்கட்சியின் எம்பியுமான பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி 113க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய ஆர்வலர்கள் கர்நாடக மாநிலம் முழுவதிலுமிருந்து ஹசான் நோக்கிச் சென்றனர். 'ஹசானை நோக்கிய நமது அணிவகுப்பு’ என்று எழுதப்பட்ட பலகைகளோடு, 'நவேது நிலாதித்தரே' எனும் மனித உரிமைகள் குழு ஏற்பாடு செய்த இந்தப் அணிவகுப்பில் பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டு, தாளக்கருவிகள் முழங்க அணிவகுப்பு நடைபெற்றது.
இந்தப் போராட்டம் குறித்து, மதச்சார்பற்ற ஜனதா தளக்கட்சியின் மாநிலத் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, ”பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான இந்த போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனவாடி மகிளா அமைப்பின் மாநிலத் தலைவர் மீனாட்சி பாலி, ”ஹெச்.டி.தேவகவுடாவின் குடும்பத்தினர் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர்கள். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்கப் போகிறார்கள். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக உள்ள பலரும், மக்களைப் போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்க முயற்சிக்கின்றனர்; ஆனால் அவர்கள் வெற்றிபெறப் போவதில்லை” என்று கூறினார்.
எழுத்தாளரும் மூத்த வழக்கறிஞருமான பானு முஸ்தக் கூறுகையில், ”பிரஜ்வல் ரேவண்ணா அரசியலமைப்பின் கீழ் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர், ஆனால், அவர் உதவி கோரி தன்னிடம் வந்த பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்; இது மன்னிக்க முடியாத செயல். பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்யக் கோரி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷினி அலி, எழுத்தாளர் ரூபா ஹாசன், விமலா கே. எஸ் உள்ளிட்ட பிரபல ஆர்வலர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
பிரஜ்வல் ரேவண்ணா மே 31 அன்று பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
கா்நாடகம், ஹசான் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.