முக்கியச் செய்திகள்

அமெரிக்கா ஒரு குடியேற்ற நாடு, உள்ளே நுழையக் கூடாதென சொல்ல நீங்கள் யார்? குமுறும் குச்சிபோட்லாவின் தாய்!

கார்த்திகா வாசுதேவன்

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் நிறவெறி பிடித்த முன்னாள் கடற்படை வீரர் புரிண்டனால் சுட்டுக் கொல்லப் பட்ட இந்திய மென்பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவின் இறுதிச் சடங்குகள் செவ்வாய் அன்று அவரது சொந்த ஊரில்  நடைபெற்றன.

அமெரிக்க நிறவெறிக்குப் பலியான இந்தியர் குச்சிபோட்லாவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற அவரது சடலத்தோடு இந்தியா வந்தனர் அவரது இளம் மனைவி சுனயனா துமலா மற்றும் இளைய சகோதரர் சாய் கிஷோர் இருவரும். நேற்று முன் தினம் மகனது இறுதிச் சடங்கின் போது மிகவும் உணர்வு வயப்பட்ட நிலையில் இருந்த குச்சிபோட்லாவின் தாயார் பர்வத வர்த்தினி புதிய அமெரிக்க அதிபர் டிரம்பின் நிறவெறிக்குத் தன் மகன் பலியாகி விட்டதாக குமுறலுடன் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க நிறவெறிக்கு ஒரு மகனை பலி கொடுத்தது போதும் எனவும், அண்ணனது இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா வந்திருக்கும் தனது இளைய மகனை மீண்டும் அமெரிக்கா திரும்ப தான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் அச்சத்துடனும், ஆத்திரத்துடனும் தெரிவித்தார்.

பர்வத வர்தினி தம்பதிக்கு ஸ்ரீனிவாஸ் இரண்டாவது மகன். மூத்த மகன் தனது பெற்றோருடன் இந்தியாவில் வசிக்கிறார். இளைய மகன்கள் இருவரும் அமெரிக்காவில் பணி புரிந்து வந்த நிலையில் ஸ்ரீனிவாஸ் சுட்டுக் கொல்லப் பட்ட செய்தியை இப்போதும் குடும்பத்தினரால் ஜீரணிக்க இயலாத நிலை. கணவரது இறுதிச் சடங்கின் பின் சுனயன துமாலா அமெரிக்கா திரும்புவாரா? என்பது குறித்து தெளிவாகத் தெரியாத நிலையில் ஸ்ரீனிவாஸின் தாயார் தனது இளைய மகனான சாய் கிஷோரை அமெரிக்கா அனுப்ப அஞ்சுவதுடன்; மகனைப் பறிகொடுத்த துக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை நோக்கி;

“அமெரிக்கா ஒரு குடியேற்ற நாடு. அங்கிருக்கும் மக்கள் அனைவரும் பணி நிமித்தம் அங்கு வந்து குடியேறியவர்களே, அப்படி இருக்கும் போது; நிறவெறி பிடித்து பிற நாட்டினரை உள்ளே நுழையக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? நிறவெறியால் என் மகனைக் கொன்றீர்கள்... நீங்களா அவனைப் படிக்க வைத்தீர்கள்? நீங்களா அவனை சிரமப் பட்டு பாடுபட்டு வளர்த்தீர்கள்? இப்போது மகனை இழந்து தவிக்கிறேன். என் போன்ற பெற்றோர்களுக்கு சொல்ல என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? என்று ட்ரம்பின் நிறவெறி பிடித்த அயல்நாட்டு குடியேற்றக் கொள்கை குறித்து ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT