சிறப்புச் செய்திகள்

தடையின்றி நடக்க வேண்டும் தமிழிசை மூவர் விழா: தமிழார்வலர்கள் வலியுறுத்தல்

எம். ஞானவேல்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஆண்டுதோறும் தமிழக அரசால் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழாவை தடையின்றி தொடர்ந்து நடத்த வேண்டும் என தமிழார்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழுக்கு தமது இசைமூலம் பல்வேறு தொண்டுகள் புரிந்து, தொண்மையான தமிழ்மொழியின் சிறப்பை உலக மக்களிடையே கொண்டுசேர்த்த பெருமை சீர்காழியில் பிறந்து, வாழ்ந்த முத்துதாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய தமிழிசை மூவரையே சாரும். சங்கீத மும்மூர்த்திகள் என போற்றப்படும் திருவாரூர் தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோருக்கும் முற்பட்டவர்கள் சீர்காழி தமிழிசை மூவர்.

சீர்காழியில் பிறந்து இன்பத் தமிழில் இசைப்பாடல்கள் இயற்றிய முதல்வர் முத்துதாண்டவர். கீர்த்தனை வடிவிலான பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பதை இசையுலகுக்கு தந்தவரும் இவரே. பூலோக கயிலாய சிதம்பரமே என்ற பாடலை,  தில்லை நடராஜனை நோக்கி முதலில் பாடினார். இலக்கிய நயம், இசை, இனிமை, பக்தி சுவை மிகுந்த ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை படைத்துள்ளார். இதில், 60 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. முத்துதாண்டவர் பதங்களே தமிழில் முதல் பதங்கள்.

சிதம்பரத்தின் வடகிழக்கே தில்லை விடங்கன் பகுதியில் பிறந்தவர் மாரிமுத்தாபிள்ளை. இவர், சிறுவயதிலேயே இசைப்பாடல்களை இயற்றும் புலமை பெற்றவர். இவரின் பாடல்கள் பொருள் செறிவுள்ளதாக இருக்கும். அவை, புலியூர்வெண்பா,  சிதம்பரேசர், சித்ரகவிகள், வருணாபுரி குறவஞ்சி, வடதிருமுல்லைவாசல் கொடியிடையம்மன் மீது பாடிய பஞ்சரத்தினம் என்பன. இவர் பாடிய கீர்த்தனைகளில்  சிலநூறு கிடைத்துள்ளன.

தரங்கம்பாடி வட்டம், தில்லையாடி கிராமத்தில் பிறந்தவர் அருணாசலக் கவிராயர். இவர், தமிழில் நான்வகை புலமையிலும் சிறந்து விளங்கினார். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழின் அருமையையும், மக்களுக்கு கூறிவந்தார். திருஞானசம்பந்தர் மீது கொண்ட பக்தியினால் பிள்ளைத் தமிழ் ஒன்றையும் பாடியுள்ளார். தருமபுரம் ஆதீன மடத்துக்குச் சென்று தங்கி, தமிழ் இலக்கண, இலக்கிய மற்றும் சமய நூல்களிலும் புலமை பெற்றார். இவரது கவியாற்றலை அறிந்த சிதம்பரம்பிள்ளை, அருணாசலக் கவிராயரை சீர்காழியிலேயே குடியமர்த்தினார். சீர்காழி கலம்பகம், சீர்காழி அந்தாதி போன்றவை இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகள்.

17-ஆம் நூற்றாண்டில் பிறந்த இம்மூவரும் சீர்காழியில் வாழ்ந்து தமது இசை மூலம் தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்துள்ளனர். இவர்களின் சிறப்பை பறைசாற்றும் வகையில், சீர்காழியின் மையப் பகுதியில் தமிழக அரசு சார்பில், தமிழிசை மூவரின் முழு உருவ வெண்கலச் சிலையுடன் ரூ. 1.51 கோடியில் மணிமண்டபம் கட்டப்பட்டது. இதை கடந்த 2013-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார்.

அதன்பிறகு, ஆண்டுதோறும் முத்துதாண்டவர் பிறந்த நட்சத்திரமான ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்று தமிழக அரசு சார்பில் தென்னக கலை பண்பாட்டு மையத்துடன் இணைந்து தமிழிசை மூவர் விழா 3 நாள்கள் நடைபெற்று வந்தது.
இதில், மாநில அமைச்சர்கள், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பதுடன், மாநிலம் முழுவதும் உள்ள தமிழ் சான்றோர்களின் கவியரங்கம், பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள், நாகஸ்வர, மேள இன்னிசை நிகழ்வுகள் இடம்பெறும்.

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் நடைபெற்று வந்த தமிழிசை மூவர் விழா, மணிமண்டபம் கட்டிய பிறகு, அதில் நடைபெற்று வருகிறது. ஆனி மாத தொடக்கத்தில் நடத்தப்பட்டு வந்த இந்த விழா, கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு (2020) கரோனா தொற்று பரவல் காரணமாக விழா நடைபெறவில்லை. நிகழாண்டு தொடக்கத்தில் கரோனா தொற்று குறைந்திருந்த நிலையிலும், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதாலும், பிறகு, கரோனா 2-ஆம் அலை காரணமாகவும் இதுவரை விழா நடைபெறவில்லை.

தற்போது, கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அரசின் விதிமுறைகளை பின்பற்றி பல்வேறு விழாக்கள் நடைபெறுவது போல, வரும் நாள்களில் தமிழிசை மூவர் விழா நடத்தப்பட வேண்டும். விழா தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி விழாவை நடத்தி, தமிழுக்கும், தமிழிசை மூவருக்கும் அரசு தொடர்ந்து புகழ் சேர்க்கவேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

சீர்காழியின் மையப் பகுதியில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம். (வலது) மணிமண்டபத்தில் உள்ள தமிழிசை மூவரின் முழு உருவ வெண்கலச் சிலை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT