சிறப்புச் செய்திகள்

பிள்ளையார் பிடிக்க நினைத்து...

ஜெபலின்ஜான்

வட மாநிலங்களில் மட்டுமே  வளர்ந்திருந்த பாஜகவை மோடி-அமித் ஷா கூட்டணி வடகிழக்கு மாநிலங்கள், தென்மாநிலங்கள் என நாடு முழுவதும் வேகமாக வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில்தான், தென்மாநிலங்களில் கேரளம்,  தெலங்கானா, புதுவை, தமிழ்நாடு ஆகியவற்றில் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்த வட மாநிலங்களில் கையாண்ட  உத்தியான சமூக கட்டுமான முறையை
பயன்படுத்தி வருகின்றனர்.

இது கேரளம், தெலங்கானா, புதுவையில் பாஜகவுக்கு கைகொடுத்தது. தமிழகத்தில் கூட கடந்த மக்களவைத்  தேர்தலுக்குப்பிறகு 7 உள்பிரிவுகளைச் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் பட்டம் வழங்கியதால் தென்மாவட்டங்கள், காவிரி டெல்டா மற்றும் கொங்கு மண்டலத்தில் வாழும் தேவேந்திரகுல வேளாளர்களில் பெரும்பகுதியினர் (5 சதவீதத்தில் சுமார் 4 சதவீதம்) அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரித்துள்ளனர்.

இந்த வகையில்தான், 2024-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கொங்கு மண்டலத்தில் பாஜகவை வலுவாக காலூன்ற  வைக்கும் முயற்சியில் சில அரசியல் நகர்வுகளை பிரதமர் மோடி-அமித் ஷா கூட்டணி செய்யத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் பிற  மண்டலங்களை ஒப்பிடும்போது கொங்கு மண்டலத்தில் இயல்பாகவே மென்மையான ஹிந்துத்துவா வாக்காளர்கள் மிக அதிகம். மேலும், மத சிறுபான்மையினர்களின் வாக்கு வங்கி மிகவும் குறைவு. இதனால், பாஜக வேர் பிடித்து வளர  நல்ல விளைநிலம் கொங்கு மண்டலம் தான் என்பது மோடி-அமித் ஷாவின் கணக்கு.
இதனால்தான் கொங்கு  நாடு என்ற புது கோஷத்தை வெளிப்படையாக வரவேற்காவிட்டாலும் பாஜக மறைமுகமாக ஆதரிக்க மு++ற்பட்டிருக்கிறது.
அதுவும் மத்திய அமைச்சராக  எல்.முருகன்  பொறுப்பேற்கும்போது தனது சுயவிவரக் குறிப்பில் நாமக்கல் மாவட்டம் என குறிப்பிடுவதற்குப் பதிலாக கொங்கு நாடு எனக் குறிப்பிட்டதில் இருந்து இந்த விவகாரம் தமிழகத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

எது கொங்கு நாடு?: கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனைத்து பேரவைத் தொகுதிகள், கரூர் மாவட்டத்தில் குளித்தலை தவிர கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வேடசந்தூர் பேரவைத் தொகுதிகள் கொங்கு மண்டலத்துக்குள் வருகின்றன.

மொத்தமுள்ள வாக்காளர்களில் 30  சதவீதம் கொங்கு வேளாளக்  கவுண்டர்கள், 30 சதவீதம் மொழிவழி சிறுபான்மையினர் (இதில் 15 சதவீதம்  அருந்ததியர்கள்), 35 சதவீதம் செங்குந்த முதலியார்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், கோவை  செட்டியார்கள்,  ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து குடியேறிய முக்குலத்தோர், கொங்கு சாணார்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்த இந்து-கிறிஸ்தவ நாடார்கள் உள்ளிட்ட பிற தமிழ்  சமூகத்தினர் என்ற சமூக அடுக்கில் தான் மக்கள் வாழ்கின்றனர். மீதமுள்ள 5 சதவீதம் மதசிறுபான்மையினர் ஆகும்.

திமுக ஆதரவு குறைந்த பகுதி: 

இயல்பாகவே தேசிய, ஆன்மிக சிந்தனை கொண்ட வாக்கு வங்கி குவிந்து கிடப்பதால் அதிமுக, பாஜக, காங்கிரஸ்  கட்சிகளுக்கு இங்கு வரவேற்பு அதிகம். தேசிய சிந்தனை கொண்ட வாக்காளர்கள் மத்தியில் இடதுசாரிகளுக்கும்  குறிப்பிடத்தக்க ஆதரவு வளையம் உள்ளது.
வட தமிழகம், காவிரி டெல்டா மாவட்டங்களில் வேரூன்றி வளர்ந்து வாக்கு  வங்கியை வளர்த்த திமுகவால் கொங்கு மண்டலத்தில் 1957,  1962 பேரவைத் தேர்தல்களில் வேட்பாளர்களையே நிறுத்த முடியாத சூழல் தான் இருந்தது.
அதற்குப் பின்பும் காங்கிரஸ், சோஷயலிஸ்ட் அல்லது இடதுசாரி போன்ற தேசிய கட்சிகளுடன் கூடிய கூட்டணி பலத்தால் தான் திமுக கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்று வருகிறது.  திமுகவின் உள்கட்டமைப்பு மிகவும் பலவீனமாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம். 

திமுகவின் வாக்கு வங்கி பலம் குறைவாக இருக்கும்  நிலையில், மற்றொரு திராவிட கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கி அசுர பலமாக இருப்பதும் கொங்கு  மண்டலத்தில்தான். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அருந்ததியர் வாக்கு வங்கி, அதிமுகவின் நிரந்தர வாக்கு  வங்கியாக இருந்தது. 
அதிமுக இரண்டாகப் பிரிந்து அதிமுக (ஜெ.) அணி களம் கண்டபோது ஜெயலலிதாவுக்கு  மாநிலம் முழுவதும் 22.37 சதவீத வாக்கு வங்கியில் பெரும் பகுதி கொங்கு மண்டலத்தில் கிடைத்தது.  மொத்தமாக ஜெயலலிதா பெற்ற 27 எம்.எல்.ஏ.க்களில் 17 எம்.எல்.ஏ.க்களை கொடுத்ததும் கொங்கு  மண்டலம் தான். கொங்கு மண்டலத்தில் 95 சதவீத தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் ஜெயலலிதா  பிடித்தார்.

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்தின்போது கைகொடுத்த கொங்கு மண்டலம், 1996  பேரவைத் தேர்தல் தவிர இறுதி காலம் வரை கைவிடவே இல்லை. 2011-இல் மொத்தமுள்ள 64 தொகுதிகளில் 58 தொகுதிகளையும், 2016-இல் 50 தொகுதிகளிலும் அதிமுக மிகப் பெரிய வெற்றியை பெற்றது.  எம்ஜிஆருக்குப்  பிறகு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை தக்கவைத்த முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதாவுக்கு பெற்றுத்தந்த  பெருமை கொங்கு மண்டலத்தையே சாரும்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரான  பிறகும் இந்த மண்டலம் அதிமுகவின் கோட்டையாகவே திகழ்கிறது. கடந்த பேரவைத் தேர்தலில் இந்த மண்டலத்தில் அதிமுக மொத்தமுள்ள 64 தொகுதிகளில் 42 தொகுதிகளை கைப்பற்றியது.
பாஜகவுக்கான வாய்ப்பு: 2011, 2016 பேரவைத் தேர்தல்கள், 2014 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் கோட்டைவிட்ட திமுக,  2019 மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ராகுல் காந்தியை பிரதமராக  அறிவிக்கும்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி பக்கம் இருந்த கொங்கு மண்டலம், மாநிலத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்க  ஆதரவு அளிக்கவில்லை என்பதையே பேரவைத் தேர்தல் முடிவு காட்டுகிறது.
கொங்குநாடு கோஷம்: கொங்கு மண்டலத்தில்  முக்கிய வாக்கு வங்கியாக இருக்கும் கொங்கு வேளாளக்  கவுண்டர்கள், அருந்ததியர்கள் வாக்கு வங்கியை குறிவைத்து  பாஜக அரசியல் நகர்வுகளை இப்போது செய்யத் தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கொங்கு  மண்டலத்தில் முக்கிய பதவிகளை இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாஜக வழங்கியுள்ளது. 

கொங்கு வேளாளர்  சமூகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய கயிறு வாரியத் தலைவர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் பதவி,  வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிரணித் தலைவி பதவி, அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர்  பதவி, அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு ஏற்கெனவே மாநிலத் தலைவர் பதவி, இப்போது  மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கியுள்ளது பாஜக தலைமை.

தமிழகத்தை பொருத்தவரை பிற  மண்டலங்களில் அடர்த்தியாக வாழும் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும், தலித்களும் ஒரே கட்சிக்கு வாக்கு வங்கியாக இருந்தது இல்லை. குறிப்பாக, வடமண்டலத்தில் அடர்த்தியாக வாழும் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும், தென்மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் முக்குலத்தோரும், தேவேந்திரகுல வேளாளர்களும்  பெரும்பான்மையாக ஒரே அரசியல் கட்சிக்கு வாங்கு வங்கியாக இருந்ததில்லை என்பதையே இதுவரை நடந்த  தேர்தல் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்புவரை கொங்கு  மண்டலம் இதில் இருந்து சற்று மாறுபட்டு இருந்துள்ளது. இங்கு அடர்த்தியாக வாழும் கொங்கு வேளாளர்களும், அருந்ததியர்களும் அதிமுகவின் வலுவான வாக்கு வங்கியாக 45 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளனர். ஆனால், அருந்ததியர் வாக்கு வங்கி 2019, 2021 தேர்தல்களில் திமுகவை நோக்கி சற்று நகர்ந்துள்ளது.
எனவே, மீண்டும் கொங்கு வேளாளர்கள், அருந்ததியர்கள் என இரு சமூகங்களையும் குறிவைத்து காய்நகர்த்தினால் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்த  முடியும் என்பது மோடி-அமித்ஷாவின் நுட்பமான கணக்கு. அதற்கான அரசியல் நகர்வு தான் கொங்கு நாடு  கோஷம் என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.

வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு கொண்ட பாமக, இதில் மெளனம் காக்கிறது.பாமகவின் மெளனம் என்பது புயலுக்கு முன்னால் உள்ள அமைதி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இப்போதைய கொங்குநாடு கோரிக்கைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே வடதமிழகம் தனியாகப் பிரிக்கப்பட்டு வன்னியநாடு உருவாக வேண்டும் என்று முன்மொழிந்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. கொங்குநாடு கோரிக்கைக்கு ஆதரவு பெருகுமானால் வன்னியநாடு கோரிக்கையுடன் பாமக களமிறங்கும் என்பது மட்டுமல்ல, அதன் மூலம் திமுகவுக்கு நகர்ந்திருக்கும் தனது ஒரு பகுதி வாக்கு வங்கியை மீட்டெடுக்கவும் அதைப் பயன்படுத்தக் கூடும்.

ஒன்றியம்,  தமிழ்நாடு என்றும், ஜெய்ஹிந்த் எதிர்ப்பு என்றும் ஆவேசமாகக் கோஷம் உயர்த்தும்போது கிணறு வெட்ட பூதம் கிளம்புவது போல  இப்போது கொங்குநாடு, வன்னியநாடு என்று புதிய பல  கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT