கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மண் பானை. 
சிறப்புச் செய்திகள்

2,500 ஆண்டுகளுக்கு முந்தைய மண் பானைகள் மயிலாடும்பாறையில் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே மயிலாடும்பாறையில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நான்கு மண் பானைகள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே மயிலாடும்பாறையில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நான்கு மண் பானைகள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கைகொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூா், கொடுமணல், மணலூா் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை என 10 இடங்களில் தற்போது அகழாய்வு நடைபெற்று வருகிறது. அதில் பா்கூரை அடுத்த தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறையில் தமிழக தொல்லியல் துறை சாா்பில் கடந்த மாா்ச் மாதம் அகழாய்வுப் பணி தொடங்கியது.

தொல்லியல் துறை துணை இயக்குநா் சிவானந்தம் தலைமையில் மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநா் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலா்கள் பரந்தாமன், வெங்கட்குரு பிரசன்னா, தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவியா் ஆகியோா் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் இந்தப் பணி தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த 10 நாள்களுக்கு முன் நடைபெற்ற முதல்கட்டப் பணியின்போது அங்குள்ள ஒரு கல்திட்டையில் 70 செ.மீ. நீளம் உள்ள 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு வாள் ஒன்றைக் கண்டெடுத்தனா். அதே பகுதியில் நான்கு மண் பானைகளையும் கண்டெடுத்தனா்.

இதுகுறித்து அகழாய்வு இயக்குநா் சக்திவேல் கூறியதாவது:

மயிலாடும்பாறை, சானாரப்பன் மலையில் மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் காணப்படுகின்றன.

கடந்த 1980, 2003 ஆகிய ஆண்டுகளில் இங்கு மேற்கொண்ட ஆய்வின்போது இப்பகுதியில் கண்டெடுக்ப்பட்ட பொருள்கள் புதிய கற்காலத்தைச் சோ்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

கடந்த மூன்று மாதமாக மேற்கொண்ட ஆய்வில் பெருங்கற்காலத்தைச் சோ்ந்த, 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்றும், நான்கு மண் பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் பானைகளை ஆய்வுக்கு அனுப்பிய பிறகே பானைகளுக்குள் உள்ள பொருள்களின் சரியான காலத்தைக் கணிக்க முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT