சிறப்புச் செய்திகள்

நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நாள் இன்று

எம்.பாண்டியராஜன்

46 ஆண்டுகளுக்கு முன்  இதே நாள் இரவில்தான் நாட்டில் அவசர நிலை  பிறப்பிக்கப்பட்டது.

1975 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி விடிந்தபோது நாடு முழுவதும் அவசர நிலை நடைமுறையில் இருந்தது.

பிரதமராக இருந்த இந்திரா காந்தி, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் ஆறு ஆண்டு காலத்துக்குத் தேர்தலில்  இந்திரா காந்தி போட்டியிட முடியாது என்றும் அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார்.

உத்தரப் பிரேதேசத்திலுள்ள ரே பரேலியில் தொகுதியில் போட்டியிட்ட அவர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்ததாக, இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்ட சோசலிஸ்ட் தலைவர் ராஜநாராயணன் தொடுத்த வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு.

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும், பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் தொடங்கின. ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில்  எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று திரண்டனர்.

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியோ அவர் பதவியில் தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்திரா காந்தியும் விலகுவதாக இல்லை.

இந்திரா காந்தியின் மேல் முறையீட்டைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அமலுக்கு சில நிபந்தனைகளுடன், ஜூன் 24 ஆம் தேதி,  உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தடை விதித்தார்.

நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பைத் தொடர்ந்து, 25 ஆம் தேதி இரவு நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார் அப்போதைய குடியரசுத் தலைவரான பக்ருதீன் அலி அகமது.

26 ஆம் தேதியிலிருந்து இந்திரா காந்தியின்  அதிரடி நடவடிக்கைகள்  தொடங்கின. பத்திரிகைகளுக்கெல்லாமும் நெருக்கடிகள் தொடங்கின. 

அவசர நிலை அறிவிக்கப்பட்ட நாளிலும் தினமணி தலையங்கத்தை எழுதாமல் நிறுத்தி, எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இடத்தைக் காலியாக விட்டது. மறுநாளும் காலி இடம் விட்டு, சில காரணங்களால் இரண்டாவது நாளாக இன்றும் அரசியல் நிலைமை பற்றித் தலையங்கம் இல்லை என்று அறிவித்தது. தொடர்ந்து, ஒரு வாரம் காலி இடம் விட்டுதான் தலையங்கங்கள் பிரசுரம் செய்யப்பட்டன.

பின்னாளில்  துணிந்து இந்திரா காந்தியின் அவசர நிலைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி நாளிதழ்கள் எடுத்ததும்  பத்திரிகைகளுக்கு எதிராக அரசின் தணிக்கை முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பத்தி பத்தியாக அச்சிடாமல் வெற்றிடமாக விட்டதும் வரலாறு.

நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நாள் இன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

உக்ரைன் எல்லையை ஆக்கிரமிக்கும் ரஷிய படைகள்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்

தனிநபர் சதங்களில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!

உ.பியில் கார் மீது லாரி மோதல்! மணமகன் உள்பட 4 பேர் பலி

SCROLL FOR NEXT