சிறப்புச் செய்திகள்

அமைதியின் சின்னமாக திகழும் 150 ஆண்டு வேப்பமரம்: பராமரித்து பாதுகாத்து வரும் கிராம மக்கள்!

பெரியார் மன்னன்


வாழப்பாடி: சேலம் மாவட்டம், பச்சமலை அடிவாரம் வேப்படி கிராமத்தில், 150 ஆண்டு முதிர்ந்த வேப்பமரம், கிராம மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் அமைதியின் சின்னமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த மரத்தை 5 தலைமுறைகளாக கிராம மக்கள் பராமரித்து  பாதுகாத்து வணங்கி வருகின்றனர்.

சேலம், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் பரந்து காணப்படும் பச்சமலை அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் இரு மலைக்குன்றுகளுக்கு இடையே, சேலம் மாவட்ட எல்லையில் வேப்படி மலை கிராமம். இந்த கிராமத்தில் ஏறக்குறைய 100 மலைவாழ் பழங்குடியின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கிராமத்தின் மையத்தில் 150 ஆண்டு முதிர்ந்த வேப்பமரம் காணப்படுகிறது. இந்த வேப்ப மரத்தில் சுற்றி குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதாலேயே இந்த கிராமம் வேப்படி  என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

வேப்பமரத்தை சுற்றி விளையாடி மகிழும் குழந்தைகள்.

இந்த கிராமத்தின் கோயில் திருவிழாக்கள் கொண்டாடுவது குறித்து முடிவு செய்வது,  கிராம மக்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இனக்குழு தலைவர் தலைமையில் ஒன்றுகூடி சுமூகமாக முடிவு காண்பதற்கும் இந்த வேப்பமரம் அச்சாரமாக இருந்து வருகிறது.

காலை, மாலை வேளைகளில் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கும், பொதுமக்கள் அமர்ந்து பொழுது போக்குவதற்கும் இந்த வேப்பமரத்தின் நிழலும் குளிர்ந்த காற்றும் பிரதானமாக  திகழ்ந்து வருகிறது.

இதுமட்டுமின்றி, மருத்துவ குணம் கொண்ட இந்த முதிர்ந்த வேப்பமரத்தின் இலை, பட்டையைப் பயன்படுத்தி, பாட்டி வைத்திய முறைகளில் எளிய மருந்து தயாரித்து இந்த கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு சுயமாக தீர்வு ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

கிராமத்தின் அமைதியின் சின்னமாக, பொழுதுபோக்கு மையமாக திகழும் இந்த வேப்ப மரத்தை 5 தலைமுறைகளாக இந்த கிராம மக்கள் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

கிராமத்தின் அடையாளமான 150 ஆண்டு முதிர்ந்த இந்த வேப்ப மரத்தைச் சுற்றி, நவீன காலத்திற்கு ஏற்ப சிமென்ட் கான்கிரீட் திண்ணை அமைத்து கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  25 அடி உயரத்தில் பரந்து விரிந்து காணப்படும் இந்த வேப்ப மரத்தின் அடிப்பகுதி  5.40 மீட்டர் சுற்றளவு பருமன் கொண்டுள்ளது தனி சிறப்பாகும்.

விவசாயி வெள்ளி

இதுகுறித்து வேப்படி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளி (61) கூறியதாவது:
கிராமம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த வேப்பமரம் இருந்து வருவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். 150 ஆண்டுகள் கடந்து 5 தலைமுறைகள் கண்ட இந்த வேப்பமரத்தின் அடியிலேயே  எங்கள் கிராமத்திற்கு தேவையான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. 

அமைதியின் சின்னமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த வேப்ப மரத்திற்கு தெய்வ சக்தி இருப்பதாக கருதி, முன்னோர்கள் வழியில் தொடர்ந்து பாதுகாத்து பராமரித்தும் வணங்கியும் வருகிறோம். 

இரு ஆண்டுக்கு முன் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் இந்த வேப்பமரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வெப்ப அலை இருக்குமா?

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT