சிறப்புச் செய்திகள்

மாநகரப் பேருந்துகளின் துயரநிலை: கண் விழிக்குமா போக்குவரத்துத் துறை?

ENS

மாநகரப் பேருந்துகளில் 60 சதவீதப் பேருந்துகள் பராமரிப்புப் பணிகள் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன என்கிறது களநிலவரம்.

சென்னையில் கடந்த செவ்வாயன்று பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் பயணி ஒருவர் காயமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், மாநகரப் பேருந்துகளின் இன்றைய நிலையை நன்கு அறிந்தவர்கள், அதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை என்றும் சொல்லலாம்.

தற்போது சென்னை மாநகராட்சியில் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 1,559 பேருந்துகள் சாதாரண பேருந்துகள். ஏற்கனவே பழைய பேருந்துகள் தற்போதும் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஓரளவுக்கு ஓடிக்கொண்டிருந்த பேருந்துகளையும் மிக்ஜம் புயல் மிச்சமில்லாமல் செய்துவிட்டது.

எந்தப் பேருந்தும் மிக்ஜம் புயலுக்குப் பிறகு முறையாக சீரமைக்கப்படாமலேயே தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில், சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 60 சதவீதம் மிகப் பழைய பேருந்துகள்தான்.

சென்னை சென்ட்டிரல் மற்றும் பேசின்பிரிட்ஜ் பணிமனைகளுக்குச் சென்றுப்பார்த்தால், பெண் பயணி விழுந்த பேருந்தின் மரத்தளம் பல நாள்களாக சீரமைக்கப்படாமல், சீரமைப்புக்காகக் காத்திருந்துள்ளது. அது மட்டுமல்ல, மிக்ஜம் புயலின்போது, பல இடங்களில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் சூழ்ந்து, பேருந்துகளும் மழை நீரில் மூழ்கியதால், பல சாதாரண பேருந்துகளில் அமைக்கப்பட்டிருந்த மரப் பலகைகள் தண்ணீரில் ஊறி ரத்தக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவை முழுமையாக சரிசெய்யப்பட வேண்டும் என்ற நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் மாதத்தில் பல பேருந்துகள் பல நாள்களாக குறைந்தது ஒரு சில நாள்களாவது தண்ணீரில்தான் மிதந்துகொண்டிருந்தது. அது மட்டுமல்ல, இயக்கப்பட்டப் பேருந்துகளும் தண்ணீரில் நீந்தியபடிதான் சென்றன. இதனால், மரப்பலகைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக சென்னை சென்டிரல் பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

போதுமான சீரமைப்புப் பணிகள் நடைபெறாத காரணத்தால், பேருந்தின் கியர்பாக்ஸ், பிரேக்குகள், எஞ்ஜின் போன்றவை கடுமையாக பழுதடைந்துள்ளன என்றும் கூறுகிறார்கள் ஓட்டுநர்கள்.

மகளிருக்கு இலவசப் பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சாதாரண கட்டணப் பேருந்துகள் காலை மற்றும் மாலையில் கடுமையான மக்கள் கூட்டத்துடன்தான் இயக்கப்படுகின்றன. இந்த அளவுக்கு மக்களை ஏற்றும் வகையில் மரப்பலகையோ, உதிரி பாகங்களோ பழுதுபார்க்கப்படுவதில்லையாம். கடந்த சில மாதங்களாக பேருந்துகளுக்கு பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ற அளவுக்கு உதிரிபாகங்களும், பழுதுபார்க்கும் தொழிலாளர்களும் நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பல்வேறு தரப்பு ஓட்டுநர்களும் முன்வைக்கிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை மாநகரப் பேருந்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறுகையில், அண்மையில் நேரிட்ட வெள்ளத்தில் சிக்கிப் பேருந்துகள் சேதமடைந்திருந்தால், அவற்றைக் கணக்கெடுக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அவை தொடர்ந்து கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ளும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT