விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாத்துங்க என்ற கோஷத்துடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் முன், தரையில் விழுந்து விவசாயிகள் கூக்குரல் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியவுடன், தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு பேசியது:
விவசாயிகள் இலவச மின் இணைப்பு கோரி 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் வழங்கப்படாமல் உள்ளது. வறட்சி பாதிப்புக்கு நிவாரணமும் வழங்கவில்லை. பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடும் வழங்கவில்லை. குறுகிய கால கடன்களை மத்தியக்கால கடன்களாக மாற்றித்தர தாமதம் செய்யப்படுகிறது. இப்போது கால அவகாசம் இல்லை என கைவிரிக்கின்றனர்.
குரங்கு, மயில், காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைந்து வருவதை தடுக்கவோ, இழப்பீடு வழங்கவோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
இத்தனை இன்னல்களையும் சந்தித்து விவசாயத்தை தொடரும் நபர்களுக்கு வங்கிக் கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதே நிலைமை நீடித்தால் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார்.
பின்னர், அய்யாக்கண்ணுவுடன் சேர்ந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்திருந்த மேடைக்கு முன் வந்து, கைகளை குவித்து கும்பிட்டபடி தரையில் படுத்து வணங்கியவாறு, "விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாத்துங்க' என தொடர்ந்து கூக்குரல் எழுப்பினர். இந்த சம்பவத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.