தமிழகத்தில் 2016-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை எதிர்ப்பார்த்த அளவு பொழியவில்லை. இதனால் கோடையில் கடும் வறட்சி ஏற்பட்டது. 2017-ம் ஆண்டைப் பொறுத்தவரை, சென்னையில் போதிய அளவு மழை பொழிந்து வருகிறது. மழைக் காலத்தின் ஆரம்பித்த கட்டத்திலேயே சென்னையில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் அவ்வப்போது பொழிந்தது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், 'தென்மேற்கு வங்கக் கடலில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென்தமிழகத்தின் அநேக இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு சிலமுறை மிதமான மழை பெய்யும்’ என்றார்.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பைவிட அதிகம் பெய்ததால் தமிழக நீர் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன. அதை அடுத்து வடகிழக்குப் பருவ மழை பலத்ததாகப் பொழியும் என்ற சிலரின் எதிர்ப்பார்ப்பை மீறி லேசான தூறலுடன் சிற்சிறு பொழுதுகளில் மழை நிதானமாக பொழிந்து வருகிறது. ஆனால் வரும் நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை சென்னையில் பல பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழை வருவதற்கான அறிகுறியாக ஜில்லென்ற காற்றுடன் சாரல் மழை பொழிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்பிருக்கிறது. கன மழையைப் பொறுத்தவரையில் அது எத்தகையதாக இருக்கும் என்பதை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பாகத்தான் கணித்துக் கூற முடியும் என்றார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். எனவே புயல் வெள்ளத்தால் சென்னை மூழ்கும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.