சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனைச் சந்திக்க அற்புதம்மாளுக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு விடுப்பில் வெளியே வந்த பேரறிவாளன், கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி சிறைக்கு சென்றார்.
இந்த நிலையில் பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கும், உறவினர்களுக்கும் அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பிரதாப்குமார்,கரோனா காலம் என்பதால் பேரறிவாளனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை காணொலி காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க முடியும். ஆனால் பேரறிவாளனின் வழக்குரைஞர் எனக்கூறி கும்பலாக பலர் சந்திக்க வருவதாக கூறியுள்ளார்.
எனவே, உறவினர்கள், நண்பர்களை கணொலி காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க வேண்டும். வழக்குரைஞர்களை பொருத்த வரை அவர்கள் பெயர் பட்டியலை சிறை நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். அதில் யாரை அனுமதிப்பது என்பது குறித்து சிறைக் கண்காணிப்பாளர் முடிவு செய்வார்.
அற்புதம்மாளை பொருத்தவரை அவர் தனக்கு கரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதித்து மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வரும் ஜனவரி 19-ஆம் தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து, பேரறிவாளனை புழல் சிறையில் அற்புதம்மாள் புதன்கிழமை சந்தித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.