தற்போதைய செய்திகள்

தோற்றவர் வென்றவர் ஆகிறார்

பாவலர் முழுநிலவன்

காந்த விசையைப் போல, புவி ஈர்ப்பு விசையைப் போல எதிர்பால் ஈர்ப்பு என்பது உலகத்தை இயக்குகிறது. காற்றையும் நீரையும் போல காதலும் வாழ்வதற்கு இன்றியமையாதது. காலூன்றி நடப்பதற்குக் காற்றும் நீரும் போதுமானது. ஆனால் சிறகின்றிப் பறப்பதற்கும் துடுப்பின்றி மிதப்பதற்கும் காதல் அவசியமாகிறது.

“இதயம்” படம் போட்ட எல்லாப் பொருளையும் வாங்கிக் குவிக்கும் பேரனுக்கும் பேத்திக்கும், “செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே” என எழுதிய பாட்டனை அறிமுகப்படுத்த வேண்டிய தினம் – “காதலர் தினம்”!

காதல் என்பது மனம் சார்ந்தது. அதனால் தான் காதலை, ஊடலை, கூடலை அகத்திணையில் வைத்து அழகு பார்க்கிறது தமிழ். உச்சபட்ச காதலை ஊடல் வழியாகவும் தோழி வழியாகவும்தான் பேசுகிறது சங்க இலக்கியங்கள்.

மற்ற துறைகளைப் போலவே காதலிலும், காமத்திலும்கூட நமது மரபார்ந்த அறிவை இழந்துவிட்டோம் அல்லது விலகி நிற்கிறோம். இதை அவ்வளவு உறுதியாக நான் எப்படிச் சொல்கிறேன் என்றால்… நான் “அந்த மூன்று நாட்கள்” என்று பெண்ணின் மாதவிடாய் குறித்து புத்தகம் எழுதினேன்.

திருமணமான என் நண்பர்கள் முதலிரவு குறித்த சந்தேகங்கள் கேட்டு என்னை அழைப்பார்கள். “நீ தான் புத்தகம் எழுதியிருக்கிறாயே! ஆலோசனை சொல்” என்பார்கள். “டேய்.. அது மாத விலக்கு (Mensus Period) குறித்த புத்தகம்டா” என சொன்னாலும் விடமாட்டார்கள்.

சந்தேகம், விளக்கம் என நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என நிறைய பேர் கேட்டதால், அது குறித்து தமிழில் பல மனநல மருத்துவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தேன். அவை பெரும்பாலும் மேற்குலகம் சொல்லும் எந்திரத்தனமான பார்வையைத்தான் கொண்டிருந்தன. அப்புறம்தான் சங்க இலக்கியங்கள் சொல்லும் மனம் குறித்த பாடல்களில் சரணடைந்தேன்.

காதலுக்கான சூத்திரத்தை, தமிழ் மட்டும்தான் எழுதி வைத்திருக்கிறது. காதலர்களுக்கு இடையே வரும் ஊடலில் – பிணக்கில் தோற்றவர் வென்றவர் ஆகிறார். இரண்டு பிள்ளைகளின் தகப்பனான எனக்கும் நான்கு பேரன் பேத்தி கண்ட என் தகப்பனுக்கும், நாளை காதலிக்கப் போகும் என் மகனுக்கும் அதுவே துணை. காதல் ஊடலில் தோற்றவர் வென்றவர் ஆகிறார்.

காதலும், குழந்தையும் ஒன்று. பொருள் வாங்கித் தருவோரைவிடவும், நேரம் ஒதுக்கிக் கொஞ்சுவோரையே விரும்புகிறது!

மெத்தப் படித்ததாய் அனத்தும் மேதாவிகளிடமும், எல்லாம் தெரியும் என இறுமாப்பு கொள்வோரிடமும் காதல் ஒருபோதும் தங்குவதில்லை.

ஆக.. காதலர் தினத்தில் அன்போடு அழைக்கிறேன். நண்பர்களே, திரும்பி வாருங்கள். பொருள் நுகர்வு மேற்கு நோக்கியும், காதல் அருள் பேறு கிழக்கு நோக்கியும் உள்ளது. திரும்பி வந்து, காதலாகி.. கசிந்துருகி.. கண்ணீர் மல்க.. அனைவருக்கும் வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT