நிலவறைக்குள் பதுங்கவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே இனவெறி எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, தாம் நிலவறைக்குள் சென்று பதுங்கவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே இனவெறி எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, தாம் நிலவறைக்குள் சென்று பதுங்கவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளைக் காவல்துறையினரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதைக் கண்டித்து, அமெரிக்க முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வன்முறைகளுடன் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெள்ளைமாளிகைக்கு வெளியே பெரும் கலவரங்களும் தீவைப்புகளும் நடந்துகொண்டிருந்த நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் குடும்பத்தினர், மாளிகையிலுள்ள ரகசிய நிலவறைக்குள் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
எனினும், தாம் "ஆய்வுக்காக" மிகக் குறைந்த நேரமே பகல் நேரத்தில் அங்கே சென்றிருந்ததாகத் தற்போது அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் வானொலிக்கு அளித்த பேட்டியில் அவர், "அந்தச் செய்தி தவறானது, ஆய்வுக்காகச் சிறிது நேரம் சென்றிருந்தேன்... ஒருவேளை எப்போதாவது தேவைப்படலாம் என்பதற்காக" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெள்ளைமாளிக்கை வெளியே இருந்த போராட்டக்காரர்களைக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி விரட்டிவிட்டு, எதிரேயுள்ள தேவாலயத்துக்குச் சென்று பைபிளுடன் அதிபர் டிரம்ப் படங்கள் எடுத்துக் கொண்டதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத் தக்கது.