தற்போதைய செய்திகள்

மதுரை கரோனா பலி, நடந்தது என்ன? பின்னணி விவரம்

DIN

கரோனா வைரஸ் தொற்றுக்குத் தமிழகத்தில் நேர்ந்துள்ள முதல் பலி, வெளிநாட்டவர் தொடர்பு காரணமாகவே நேர்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கரோனா தொற்று இருப்பதாகத் தமிழகத்தில் இதுவரையிலும் 17 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவருக்கு வயது 54. இவருக்கு ஏற்கெனவே நீரழிவுப் பிரச்சினை இருந்திருக்கிறது. மேலும், நுரையீரல் (சுவாசப்) பிரச்சினையும் இருந்திருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த இவருக்கு இரு மனைவிகள், குடும்பங்கள்.  நிலம், வீடு விற்பனைத் தொழில் செய்துவந்த இவர், மதப் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வார், பிரச்சாரமும் செய்வார் எனக் கூறப்படுகிறது.

தொடக்கத்தில் இவர், தமக்கு எந்த விதத்திலும் அயல்நாட்டவர் தொடர்பு இல்லை  என்றே தெரிவித்து வந்திருக்கிறார். இதைத் தொடர்ந்தே, முற்றிலும் வெளிநாட்டுத் தொடர்புகள் அற்ற ஒருவருக்கு கரோனா பாதிப்பு நேர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது மிகவும் அபாயமான சூழல்.

எனினும்,  அரசுத் தரப்பில் மேற்கொண்ட விசாரணையில் இவருக்கு இருந்த தொடர்புகள்  அறியப்பட்டன.

தாய்லாந்திலிருந்து வந்து ஈரோட்டில் தங்கியிருந்த சிலரை இவர் சந்தித்திருக்கிறார். அல்லது அவர்கள் மதுரைக்கு வந்து இவரைச் சந்தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து குழுவினர் அனைவருமே தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் இருவருக்குத் தொற்று இருப்பதாக அறியப்பட்டது. கோவை மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். எனினும் அவர், கரோனாவால் அல்ல, சிறுநீரகப் பிரச்னை காரணமாகவே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரையில் உயிரிழந்தவர், கடந்த வாரத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நீரழிவுப் பிரச்சினை இருக்கும் நிலையில், தொடக்கத்தில் நிமோனியா காய்ச்சலாக இருக்கலாம் என்று கருதியும் பிறகு  பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்று கருதியும் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு ரத்த அழுத்த பிரச்சினையும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், சிகிச்சையால் எவ்விதப் பலனும் இல்லை. அவருடைய உடல் நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் (மதுரையில் ஏற்கெனவே கரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுவிட்டார்).

தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனையில்  கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், அப்போதே அவருடைய உடல்நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

இதைத் தொடர்ந்துதான், இவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றித் திங்கள்கிழமை பத்திரிகையாளர்களிடம்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.

தொடர்ந்து, சிகிச்சை அளித்து வந்தபோதிலும் அவருடைய உடல்நிலை  ஒத்துழைக்கவில்லை. எனவேதான், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிவாக்கில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

எனினும், இரவு 12.20 மணியளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். இரவு 2 மணிக்கு இந்த மரணத்தை அதிகாரபூர்வமாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.

இதனிடையே, இறந்தவருடைய இரு குடும்பங்களும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர் யார் யாரையெல்லாம் சந்தித்தார், சந்தித்திருப்பார் எனப் பட்டியலிட்டு அவர்களையும் கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒற்றை நபர் கவனக் குறைவாக அல்லது அலட்சியமாக நடந்துகொண்டதால் தற்போது அவருடைய இரு குடும்பங்களும் அவர் சம்பந்தப்பட்ட பலரும் சிக்கலில் இருக்கின்றனர். இவர்கள் யார் எவர் என்பதைக்கூட உறுதி செய்வது எளிதல்ல.

இவர்களில் யாருக்கேனும் கரோனா வைரஸ்  தொற்றியிருக்கலாமோ என்ற அச்சம் இருப்பதுடன், இவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்படவும் வேண்டியிருக்கிறது.

எனவே, ஒருவரை விட்டு ஒருவர் விலகியிருப்போம். தேவையில்லாமல் யாரையும் சந்திப்பதைத் தவிர்ப்போம். கரோனா தொற்று சங்கிலி தொடராமல் அறுப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT