முகப்பு
தற்போதைய செய்திகள்

அச்சுறுத்தும் கரோனா: நாட்டில் ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று; 3498 பேர் பலி

நாடு முழுவதும் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
பகிர்:


நாடு முழுவதும் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது. இத் தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கையும் 2 லட்சத்து 8 ஆயிரத்தைக் கடந்துவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியிருப்பதாவது:
வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 3,498 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 2,08,330 பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தோரின் சதவீதம் 1.11 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக மேலும் 3,86,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் சதவீதம் 81.99 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 31,70,228 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 16.90 சதவீதமாகும். அதேவேளையில் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,53,84,418 ஆக உள்ளது. 

நாட்டில் ஏப். 29 வரை 28,63,92,086 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை ஒரே நாளில் 19,20,107 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தேசிய அளவில் ஒரே நாளில் 3.86 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தில்லி, மேற்குவங்கம், கர்நாடகம், கேரளம், சத்தீஸ்கர், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். வியாழக்கிழமை மட்டும் 2,97 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

நாட்டில் இதுவரை மொத்தம் 15.22 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உள்பட்டோர் என்ற முன்னுரிமையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.