நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,643 பேருக்கு தொற்று: 464 பேர் பலி
நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,643 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,643 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 464 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், நாட்டில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது.
கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய பாதிப்பு 42,982 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிததாக 44,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 44,643 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,18,56,757-ஆக உயா்ந்துள்ளது.
41,726 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,10,15,844 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,14,159 -ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 464 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,26,754-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 49,53,27,595 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 47,65,33,650 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வியாழக்கிழமை மட்டும் 16,40,287 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.