வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 195 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களை மீட்பதே முக்கியம் என்றும், மறுவாழ்வு விரைவில் தொடங்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ரஷியா, சீனா மற்றும் மாலத்தீவுகளுக்குப் பிறகு, கேரளம் மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரி பேரழிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ள நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்று வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்த சோகமான நிகழ்வில் இறந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு எங்கள் பிரார்த்தனைகள். பேரிடரில் சிக்கலான மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் தைரியத்தை நாங்கள் பாராட்டுகிறோம். மக்களை தொடர்ந்து பாதுகாப்போம். இந்த இக்கட்டான நேரத்திலும் நமது எண்ணங்களில் இந்தியா உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், கேரள நிலச்சரிவின் "துயரமான விளைவுகள்" குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் செய்தியை அனுப்பினார். அதில், "கேரள நிலச்சரிவில் சிக்கி இறந்தோருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவும், மேலும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
சீனா வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், "இந்திய மாநிலமான கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்த செய்தியைப் பார்த்தோம். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் உயிரிழந்த குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்" என்று சீன வெளிநாட்டினர் தெரிவித்துள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்திருந்தார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஐ தாண்டியது
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஐ தாண்டியது. நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி பகுதியில் உள்ள முண்டக்கை, சூரல்மலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தென்னிந்திய மாநிலத்தின் மிக மோசமான நிலச்சரிவுகளில் ஒன்றாகும், மேலும் கடைசியாக 2020 இல் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 65 பேர் இறந்தனர்.
கேரளத்தின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை(ஜூலை 30) அதிகாலை அடுத்தடுத்து பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.
மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறைகளுடன் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன.
ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.