முகப்பு
தற்போதைய செய்திகள்

வங்கதேசத்தில் முன்னாள் அதிபர் சிலை உடைப்பு!

வங்கதேசத்தின் முன்னாள் அதிபரான முஜிபுர் ரகுமானின் சிலை உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 1:15 PM
முன்னாள் அதிபர் முஜிபுர் ரகுமான் சிலையை உடைத்த போராட்டக்காரர்கள் - படம் | எக்ஸ்
பகிர்:

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரகுமான் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனாவின் அதிகாரபூர்வ இல்லத்தை சூறையாடி சேதப்படுத்தினர். அவரது தந்தை முஜிபுர் ரஹ்மானின் சிலையையும் உடைத்தனர்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து அவரது அவாமி லீக் கட்சி அலுவலகங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

Advertisement

டாக்காவில் 1971 விடுதலைப் போராட்ட வீரரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் சுத்தியலால் அடித்து உடைத்த விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகின. வங்கதேசத்தின் தேசத்தந்தை என்றழைக்கப்படும், ஹசீனாவின் தந்தையுமான பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலை உடைக்கப்பட்ட காட்சிகள் நேரடியாகவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

ஷேக் ஹசீனாவின் அதிகாரபூர்வ இல்லமான கணபாபனில் ஏற்பட்டக் குழப்பத்தையும் விடியோக் காட்சிகள் வெளிப்படுத்தின.

எதிர்ப்பாளர்கள் பிரதமர் அலுவலக வளாகத்தை சூறையாடிவிட்டு கட்டடத்திலிருந்து புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.

தன்மோண்டி, டாக்காவில் உள்ள அவாமி லீக்கின் அலுவலகங்களும் அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டன.

மேலும், உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமலின் இல்லமும் சேதப்படுத்தப்பட்டது. சில நபர்கள் பிரதமரின் அலுவலக வளாகத்தில் இருந்து நாற்காலிகள், சோஃபாக்களை எடுத்துச் செல்லும் காட்சிகள், கொள்ளையடிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

காவல்துறைக்கும், மாணவப் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த வன்முறை மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1971ல் வங்கதேசத்தின் சுதந்திரப் போரில் ஈடுபட்ட படைவீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவிகிதம் ஒதுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தப் போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து, இதுவரையிலும் 11,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments