நாமக்கல்: மோகனூரில் நடைப்பயிற்சி சென்றபோது, ஆம்னி வேன் மோதியதில், இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அராக் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மலையண்ணன்(68). இவரது மனைவி, நிர்மலா(55). அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள்(65).
தினசரி இவர்கள் மூவரும் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6 மணியளவில் நாமக்கல் - மோகனூர் சாலையில் நடைப்பயிற்சிக்கு சென்றனர். அவர்கள் மீண்டும் வீடு திரும்புகையில், நாமக்கல்லில் இருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்னி வேன் திடீரென மூன்று பேர் மீதும். மோதியது.
இதில் மலையண்ணன் சம்பவ இடத்தில் பலியான நிலையில், மேலும் இருவர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்களும் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
இதையும் படிக்க: அவிநாசி: நடைப்பயிற்சி சென்ற கார் விற்பனையாளர் வெட்டிக் கொலை
ஆம்னி வேனை மோகனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(40) என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
விபத்தில் அவரும் காயம் அடைந்ததால் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு நாள்களாக நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் காலை வேளையில் பனிமூட்டம் நிரம்பி காணப்பட்டதால், சாலையில் சென்றவர்கள் மீது ஆம்னி வேன் மோதி இருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.